மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: இது மட்டும் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகாதா?

சிறப்புக் கட்டுரை: இது மட்டும் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகாதா?

அ.குமரேசன்

‘மெர்சல்’ திரைப்படத்தின் சில உரையாடல்களை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கிளப்பிய புழுதி அடங்குவதற்குள், விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று (அக்.22) ஒளிபரப்பாகவிருந்த ‘தமிழகப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா’ என்ற ஆழமான, சமூக அக்கறை மிகுந்த விவாதத்துக்கு எதிர்ப்பலை எழுந்தது. பின்னர் அந்த விவாத ஒளிபரப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் காரணமாகக் களம் இறங்கியவர்களை வாழ்த்தினேன்.

இந்த எதிர்ப்பில் உள்ள பெண்ணின் சுயமரியாதைக் கனலுக்கு மதிப்பளித்து ஒளிபரப்பை விலக்கிக்கொண்டார்கள் போலும் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் பாராட்ட நினைத்திருந்தேன். அவசரப்பட்டு அப்படிச் செய்வதற்கு முன், ‘நீயா நானா’ இயக்குநர் ஆன்டனி மிகுந்த கோபத்தோடு முகநூலில் தனது எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறார். பெண் சுதந்திரத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கிற இந்தக் காலகட்டத்தில், அவர்கள் ஒளிபரப்பவிருந்த விவாதத் தலைப்பே முகம் சுளிக்கச் செய்கிறது என்றால், ஆன்டனியின் பதிவும் அதற்கு நிகராக இருக்கிறது. பெண் தன்னை அழகாக வைத்துக்கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரிப் பெண்கள் “அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும்” விவாதித்தார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். உடல், ஒப்பனை, உணவுப் பழக்கம், உடை, அணிகலன்கள் ஆகியவைதான் அழகின் அடையாளமென பெண்ணின் சிந்தனையை ஓர் அலங்காரக் கூண்டுக்குள் அடைக்கிற வேலையைத்தான் இந்த விவாதமும் பெருமளவுக்குச் செய்திருக்கிறது என்பதை ஆன்டனியின் பதிவிலிருந்தே உணர முடிகிறது.

ஒரு வாதத்துக்காக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலராவது, இதுதான் பெண்ணுக்கு அழகா என்ற கோணத்தில் விவாதித்திருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால், அப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகள் இடம்பெற்றிருக்குமானால் அதைக் கேட்க முடியாமல் போய்விட்டது உண்மைதான்.

கருத்துத் தடுப்புச்சுவர்கள்

இடதுசாரிப் பெண்ணியவாதிகள்தான் காவல்துறையை அணுகி நிகழ்ச்சி ஒளிபரப்புக்குத் தடை பெற்றார்கள் என்று ஆன்டனி தெரிவித்திருக்கிறார். இடதுசாரிச் சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களும்தான் பெண்ணின் சுயம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காகவும், பாலின சமத்துவம் உள்ளிட்ட மானுட மாண்புகளுக்காகவும் களமிறங்கிப் போராடுவதில் முன் வரிசையில் நிற்கிறார்கள் என்பற்கு ஆன்டனியின் அந்த வரிகள் சாட்சியமாகின்றன. இருந்தபோதிலும், அதற்காக மகிழ்ச்சியடைவதைவிட, விவாதத்தில் என்ன கருத்துகள் வந்தன என்பதை நான் உட்பட யாரும் அறிந்துகொள்ள முடியாமல் போனதே என்ற வருத்தமே எனக்கு மேலோங்குகிறது.

தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பிரமுகர்கள், தங்களை விமர்சிக்கிறவர்கள் பேசுகிறபோது அடிக்கடி குறுக்கிட்டுத் தொடர்ந்து பேசவிடாமல் தடுப்பதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து மறுப்புக் கூறி, எதிர்க்கருத்தாளரின் குரலோடு கலக்கச் செய்து, அந்த இரைச்சலில் அவர் என்ன சொல்கிறார் என்பதே நேயர்களைச் சென்றடையவிடாமல் தடுக்கிற உத்தி அது. அவர்களிடம் நான் சொல்வேன், “எனது கருத்தை முற்றிலுமாக மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. நான் பேசுவது முட்டாள்தனமானது என்றுகூடச் சொல்லுங்கள். ஆனால், நான் பேசி முடித்த பிறகு சொல்லுங்கள்” என்று. அதேபோன்ற கருத்துத் தடுப்புச்சுவர்களை யாரும் எதற்காகவும் எழுப்பக் கூடாது.

‘நீயா நானா’ விவாதங்கள் சில மிக முக்கியமான, சமுதாயத்தில் மாற்றம் விளைவிக்கக்கூடிய திசையில் இருந்திருக்கின்றன. அத்தகைய சில நிகழ்ச்சிகள் குறித்து நான் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறேன். நானும் மூன்று விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு பற்றிய விவாதத்தில் எனது கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. தலைமைப் பண்பு குறித்த ஒரு விவாதத்தில், விவாதம் முறைப்படி முடிந்த பிறகு எழுந்து நான் கூறிய ஒரு கருத்தை ஒளிபரப்பில் சேர்த்திருந்தார்கள். காமராஜர் பற்றிய ஒரு விவாதத்தில் நான் கூறிய சில முக்கியமான கருத்துகளை நீக்கியிருந்தார்கள்.

இப்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது தொடர்பான தனது பதிவை ஆன்டனி, “ஒரு நிகழ்ச்சி வருவதற்கு முன்பே தடை விதிக்கக் கோரும் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதிய அடிப்படைவாதிகளுக்கும், இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டு முடித்திருக்கிறார். இதுதான் இனி மேற்கொண்டு பேசப்பட வேண்டிய கருப்பொருள் என்று கருதுகிறேன்.

அடிப்படைவாதிகளின் குரல்?

முதலில், இந்த நிகழ்ச்சி தொடர்பாகக் காவல்துறையை நாடி, தடை கோரியவர்கள் குறிப்பிட்ட எந்த ஓர் இடதுசாரி அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதைத் தெரிவித்தாக வேண்டும். வெவ்வேறு இடதுசாரி அமைப்புகள், பெண்ணுரிமை இயக்கங்கள், அமைப்பு சாராத தனிப்பட்ட சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என அவர்களாக ஒன்றுசேர்ந்து இந்த முயற்சியை முன்னெடுத்தார்கள் என்பதே உண்மை.

இடதுசாரி அரசியல் கட்சிகளோ, அவற்றின் தலைமையில் செயல்படும் அமைப்புகளோ இவ்வாறு தடைகோருமாறு கட்டளையிடவும் இல்லை, வழிகாட்டவும் இல்லை. இன்றைய வளர்ச்சிப் போக்கில் பெண்கள் இப்படி சுயமாகச் செயல்படும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மென்மேலும் வலுப்பெற வேண்டிய மாற்றம். மதவாத - சாதியவாத அடிப்படைவாதிகளுக்கும் இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எளிதில் ஒதுக்கிவிட முடியாது. இந்த நீயா நானா விவாதம் ஒளிபரப்பாக இருந்தது பற்றிய எனது விமர்சனத்தை, “தலைப்பு அநாகரிகமா, விவாதம் அநாகரிகமா” என்று கேட்டு முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றி, இந்த விவாதத்தை எதிர்ப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகாதா என்று கேட்டிருப்போரில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆதரவாளர்களும் உண்டு, மற்றவர்களும் உண்டு. “உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளியா” என்று, மாற்றுச் சிந்தனைகளுக்கு எதிரான கெடுபிடிப் போர் தொடுப்பவர்கள் கேட்டுவிட இடமளித்துவிடக் கூடாது என்பதே என் நிலை.

“உன் கருத்தை நான் ஏற்கவில்லை. ஆனால், உன் கருத்தை வெளிப்படுத்த உனக்குள்ள உரிமையைக் காக்க உயிரையும் கொடுப்பேன்” என்ற உலகப் புகழ்பெற்ற மேற்கோளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டவன் நான். (அந்த மேற்கோளுக்கு உரியவர் வால்ட்டேர் என்றும், அவரல்ல என்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. ஆகவே, யார் என்பதை விடவும் என்ன என்பதே முக்கியம் என்பதால் இந்த மேற்கோளை மட்டும் குறிப்பிடுகிறேன்.)

அந்தவகையில் குறிப்பிட்ட விவாதம், எழுத்தாக்கம், கதையாடல், நாடகம், திரைப்படம், சித்திரச் சித்திரிப்பு என எதுவானாலும், அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்களோ அதைச் சொல்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. ஜனநாயகத்தின் இதயத்துடிப்பே கருத்துகளையும், மாற்றுக் கருத்துகளையும் அச்சமின்றி வெளிப்படுத்துகிற சுதந்திரம்தான். குறிப்பாகப் பண்பாட்டுத் தளத்தில் அந்தச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்பட்டிருக்க வேண்டும். அவர்களைப் புண்படுத்துகிறது, இவர்களைப் புண்படுத்துகிறது, அதற்கு எதிராக இருக்கிறது, இதற்கு எதிராக இருக்கிறது என்றெல்லாம் கூறித் தடை செய்வது ஜனநாயக வேரை வெட்டுகிற வன்செயலாகிவிடும்.

எதிர்க்கும் உரிமையும் தடுக்கும் உரிமையும்*

ஒரு குறிப்பிட்ட கருத்து, உரையாடல், விவாதம், கதை ஆகியவற்றை வெளிப்படுத்தும் உரிமையைப் போலவே, அதையெல்லாம் எதிர்க்கும் உரிமையும் உன்னதமானது. கவனிக்க - எதிர்க்கும் உரிமையைத்தான் சொல்கிறேன், தடுக்கும் உரிமையை அல்ல.

இந்த ‘நீயா நானா’ விவாதத்தையே எடுத்துக்கொள்வோம். நிகழ்ச்சிக்கு அல்லது குதர்க்கமான அந்தத் தலைப்புக்கு வந்த எதிர்ப்பின் அளவையும் வேகத்தையும் கண்டு சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து நிறுத்தியிருப்பார்களானால் அது வரவேற்கப்பட வேண்டியது. அப்படி தாங்களாக விலக்கிக்கொள்ளச் செய்கிற அளவுக்கு, சிந்தனையாளர்களின் எதிர்ப்பு ஒரு சமூகக் கோபமாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்க வேண்டும். எந்தவொரு பிரச்னையையும் சமூகக் கோபமாக மாற்றுவதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.

பெண் எதற்காக வெளியே வர வேண்டும் என்று இப்போதும் கேட்கிறவர்கள் மிகுந்துள்ள சமுதாய அமைப்பில், பெண் இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதற்கு எதிரான சமூகக் கோபத்தை அவ்வளவு எளிதாக உருவாக்கிவிட முடியாதுதான். ஆயினும், அதுதான் நம்பகமான, சரியான வழி. அப்படி சமூகக் கோபமாகப் பரிணமிக்கச் செய்வதற்கான முயற்சிகளில் உணர்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அவ்வாறு சமூகக் கோபமாகப் பரிணமிக்கச் செய்ய முடியவில்லை என்ற இயலாமை, காவல்துறை உள்ளிட்ட அரசாங்க எந்திரத்தின் தலையீட்டைக் கோருகிற நிலைமைக்குத் தள்ளிவிட அனுமதிக்கக் கூடாது. போராளிகள் தங்களுடைய ஒன்றுபட்ட போராட்டத்திலும், மக்களுடைய பங்கேற்பிலும்தான் தீர்வு இருக்கிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டுமேயன்றி, ஒருபோதும் அரசாங்க எந்திரத்திடம் தீர்வுப் பொறுப்பை ஒப்படைத்துவிடக் கூடாது. அது பின்னர், முற்போக்கான, மாற்றத்துக்கான கருத்துகளுக்கும் தடை கோரப்பட்டு, அதிலும் காவல்துறை தலையிடுவதற்கு இட்டுச் சென்றுவிடும்.

குறிப்பாகப் பண்பாட்டுத் தளப் பிரச்னைகளில் இந்தப் புரிதலும் செயல்பாடும் மிக மிகத் தேவை. இல்லையேல், எந்தவொரு பொதுவான பண்பாட்டுத் தளப் பிரச்னையிலும், “இதிலே ஏன் போலீஸ் மூக்கை நுழைக்கிறது” என்று கேட்கிற கம்பீரத்தை இழக்க நேரிடும்.

கருத்துச் சுதந்திரம் தாக்கப்படுகிற செய்திகள் வருகிறபோதெல்லாம், கண்டன நிகழ்வுகளில் ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறேன். “இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மட்டுமல்ல; கருத்தறியும் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையும்கூட” என்பதே அந்தக் கருத்து. நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ, அதை வெளிப்படுத்தும் உரிமை எனக்கு எவ்வளவு தலையாயதோ, அதே அளவுக்குத் தலையாயதுதான் நான் சொல்வது என்ன என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் உரிமையும்.

‘மெர்சல்’ படத்தின் சில உரையாடல்களை நீக்க அதிகார பலத்தோடு நெருக்கடி அளித்தது அந்த சினிமாவின் தயாரிப்பாளர்கள், நடிகர் சம்பந்தப்பட்ட வெளிப்பாட்டுச் சுதந்திரம் தாக்கப்பட்ட பிரச்னை மட்டுமல்ல; அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கேட்பதற்கு சினிமா பார்வையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் தாக்கப்பட்ட பிரச்னையுமாகும். ஓர் எழுத்தாளரின் புத்தகம் விலக்கிக்கொள்ளப்படுவது, அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தப் புத்தகம் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு மக்களுக்கு உள்ள உரிமை தட்டிப்பறிக்கப்படுகிற வன்மமாகும்.

இந்தப் படத்தின் நாயக நடிகர் விஜய் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று, அவரது குடும்ப அட்டைப் படத்தை பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா வெளியிட்டது என்பது எந்த மதத்தவரானாலும் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையின் மீதான மலிவான தாக்குதல். இந்துக்கள், இந்துக்களின் கடைகளிலேயே பொருள்கள் வாங்க வேண்டும் என்று மதவாதிகள் ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டிகளைப் புறக்கணித்த மக்கள், இப்போது இந்து நடிகர்கள்தான் இந்து கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதாக வருகிற, கருத்துரிமை ஒடுக்கலோடு இணைந்த மதவெறியூட்டும் அரசியல் நச்சுத்தனங்களையும் புறக்கணிப்பார்கள்.

இதையெல்லாம் வாதிடுகிறபோது, கருத்துச் சுதந்திரம் என்பதற்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா, எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என்று எழுப்பப்படுகிற வினாக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கில்லை. படைப்பாளியின் சமூகப் பொறுப்பு, வெளிப்பாட்டுச் சுதந்திரத்தோடு இரண்டறக் கலந்ததே. ஆனால், ஒரு படைப்பில் அல்லது ஒரு விவாதத்தில் சமூகப் பொறுப்பு வெளிப்படவில்லை என்றால், அதையும் விமர்சன உரிமையால்தான் இடித்துரைக்க வேண்டுமேயல்லாமல், விலக்கல் அதிகாரத்தால் அல்ல.

எந்த இசத்தின் பெயரால் கருத்துரிமையும் கருத்தறியும் உரிமையும் ஒடுக்கப்பட்டாலும் அது முறியடிக்கப்பட்டாக வேண்டும். நீயா நானா விவாதம் பற்றிய விவாதங்கள் இந்தத் திசையில் தடம் மாற்றப்படுவது, மானுட மாண்புகளை உயர்த்திப் பிடிக்கக் களமிறங்கியிருப்போருக்குத் தோள் கொடுக்கும். சமத்துவப் போராளிகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon