மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

அதிமுக பொதுக்குழு வழக்கு: முதல்வர் பதில் மனு!

அதிமுக பொதுக்குழு வழக்கு: முதல்வர் பதில் மனு!

பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடர்ந்துள்ள வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இரு அணிகளாக பிரிந்த அதிமுக அணிகள், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ஒன்றிணைந்த நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி ஒருங்கிணைந்த அணிகள் சார்பில் பொதுக்குழு கூடும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், “பொதுக்குழுவில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்” என்று கூறி வெற்றிவேல் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மீண்டும் மேல்முறையீடு செய்தார். இதன் தீர்ப்பிலும், பொதுக்குழு கூடுவதற்குத் தடையில்லை எனவும், ஆனால் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது” என்று கூறி வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தச் சூழ்நிலையில் நேற்றைய தினம் (அக்டோபர் 23) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இரு அணிகளும் இணைந்த பிறகே, அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்கவில்லை. பொதுக்குழுவில் பெரும்பாலானவர்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. நாங்கள் தாக்கல் செய்த 1,877 பிரமாணப் பத்திரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. அதிமுகவின் தலைவராக தினகரனை முன்னிறுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த வெற்றிவேல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கில் விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon