மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

தலைமை தேர்தல் அதிகாரியைச் சுற்றும் சர்ச்சை!

தலைமை தேர்தல் அதிகாரியைச் சுற்றும் சர்ச்சை!

இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைக்கான காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்துக்கு நவம்பர் 9ஆம்தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. குஜராத் அரசுக்கு ஆதரவாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.ஒய்.குரேஷியும்கூடத் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலை விமர்சித்துள்ளனர்.

இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஏ.கே.ஜோதிதான். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜோதி, குஜராத் அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர். முதல்வராக மோடி இருந்தபோது குஜராத்தின் தலைமை செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கவுகாத்தி அமர்வுமுன் சில ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணங்கள் மூலம், இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னரும், குஜராத் அரசுக்குத் தனது ஒதுக்கிய பங்களாவை அவர் காலி செய்யாமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

குஜராத் தலைமை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். பிரதமராக மோடி பதவியேற்றபின் கடந்த 2015 மே 13ஆம் தேதி ஜோதியைத் தேர்தல் அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது. பின்னர் 2017 ஜூலை 6ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியாக அவர் பதவியேற்றார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சார்ப்பற்ற ஒரு சுதந்திர மானஅமைப்பாகும். அப்படியிருக்கும்போது, கடந்த 21015ஆம் ஆண்டே தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்றபோதும் மாநில அரசு வழங்கிய பங்களாவை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததும் அதற்காக குஜராத் அரசிடம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளதும் அவர் வகிக்கும் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கான சுதந்திரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

குஜராத் என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பான விசாரணைக் குழுவில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திரவர்மா சமீபத்தில் குஜராத்திலிருந்து அசாமுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் வசித்துவரும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. தன்னைப் பழிவாங்குவதற்காகவே இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வர்மா, ஏராளமானோர் இன்னும் அங்கீகாரம் இல்லாமலேயே அரசு பங்களாக்களில் வசித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பான வழக்கில்தான் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் மேற்கூறிய ஆவணத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ஏ.கே.ஜோதி விஜிலன்ஸ் ஆணையராக இருந்தபோது அகமதாபாத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை தேர்தல் அதிகாரியாகப் பதவியேற்ற பின்னும் காலி செய்யாமல் அங்கீகாரம் பெறாமலேயே வசித்து வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காததால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ஜோதிக்கு பங்களா ஒதுக்கீடு விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக டைம்ஸ் அப் இந்தியா பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “2015இல் நான் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றாலும் டெல்லியில் எனக்கு பங்களா 2016ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. எனவே, அகமதாபாத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் வசிக்க குஜராத் அரசிடம் அனுமதி கேட்டிருந்தேன். இதற்கான வாடகையை முறையாகச் செலுத்தினேன்” என விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளபோதும், வர்மாவுக்கு ஒரு நியாயம், ஜோதிக்கு ஒரு நியாயமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon