மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

ரஜினி போனஸ்: 2.0 தொழிலாளர்கள் ஏமாற்றம்!

ரஜினி போனஸ்: 2.0 தொழிலாளர்கள் ஏமாற்றம்!

ரஜினி என்ற பந்தயக் குதிரையின் மீது பணம் கட்டி சம்பாதித்தவர்களும், இழந்தவர்களும் உலகம் அறிய சம அளவில் இருக்கின்றனர். இழந்தேன், சம்பாதித்தேன் என்ற இரண்டில் ஒன்று அதிகமாகலாம். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லப் பலரும் தயாராக இல்லை. காரணம், மீண்டும் ஒரு முறையாவது ரஜினியை வைத்துச் சம்பாதித்துவிட முடியாதா என்ற ஆசைதான்.

திரையரங்கங்கள் பெருகிவிட்ட காலத்தில் ரஜினியின் திரைப்படம் உலகம் முழுக்க ரிலீஸாகி ஒரு வாரத்தின் கடைசி விடுமுறையைத் தாண்டிவிட்டால் போதும், முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடலாம். படம் சிறப்பாக இருந்துவிட்டால், அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கிடைக்குமா என்று கேட்கும் அளவுக்குச் சம்பாதிக்கலாம். சில ஆயிரம் தியேட்டர்களில் பல நூறு கோடிகளை எடுக்க முடியுமா என்ற கேள்வி இங்கே எழும். அதற்குப் பதில் சொல்லும் விதமாகத்தான் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்திக்கொண்டிருக்கிறது லைகா.

வருகிற 27ஆம் தேதி துபாயிலுள்ள Burj Khalifa கட்டடத்தில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு 2.0 படத்தைத் தாண்டி இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் யாரும் அழைக்கப்படவில்லை. 2.0 திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் பலம்வாய்ந்த கோட்டையான துபாயிலிருக்கும் செல்வந்தர்களும் உலகம் முழுவதிலுமிருக்கும் பணக்கார ரஜினி ரசிகர்களும் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் டிக்கெட் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ரஜினியின் மூலம் பணமுடையவர்கள் சம்பாதித்துக்கொண்டே செல்ல, அவர் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை வேறாக இருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று 2.0 படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக ஏமி ஜாக்சன் அறிவித்திருந்தார். கடைசிக் கட்டப் படப்பிடிப்பைச் சென்னையிலுள்ள அம்பத்தூர் பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கியிருக்கிறார்கள். அதில் ரஜினி - ஏமி இணைந்து நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் 2.0 படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிக்க, எடிட்டிங் டீமும் ஸ்டூடியோவுக்குள் ஒருபக்கம் தங்களது வேலையைத் தொடர்ந்து செய்துவந்தனர். இப்போது அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அனைவரும் துபாய்க்குப் பயணமாகிறார்கள். டிக்கெட் வாங்கி விழாவுக்கு வருபவர்களைத் தவிர, 2.0 திரைப்படத்தில் வேலை செய்யும் டெக்னீஷியன்களை அழைத்துக்கொண்டு துபாயில் நடைபெறும் விழா ஏற்பாடுகளைக் கவனிக்கவும், தேவையான படத்தின் மெட்டீரியல்களை கையாளவும் விரைவில் துபாய்க்கு பயணமாகிறார் ஷங்கர். இதில் இடம்பெற்றிருப்பவர்கள், ஒவ்வொரு துறையையும் சார்ந்த தலைமைகளே தவிர தொழிலாளர்கள் அல்ல.

ரஜினி நடிக்கும் படத்தின் ஒவ்வோர் இசை வெளியீட்டின்போதும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் அல்லது அன்பளிப்பு இந்த முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. 2.0 படத்தில் பணிபுரிந்த முரளி மனோகர் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தபோது விசாரித்ததில், இந்த தீபாவளிக்கு எதிர்பார்த்த ரஜினியின் போனஸ் தொழிலாளர்கள் யாருக்கும் தரப்படவில்லை என்ற தகவல் தெரியவந்தது. படையப்பா திரைப்படம் வரையில் ரஜினியின் பணியாக இருந்துவந்த இந்த போனஸ் சமாசாரம் அதன்பிறகு தயாரிப்பாளர்களின் கைகளுக்கு மாறியது. எந்திரன் படத்துக்கு தங்கம், லிங்கா படத்துக்கு கோட் சூட், கபாலி படத்துக்கு மலேசிய வெள்ளிகள் எனத் தொடர்ந்து வந்த போனஸ் 2.0 படத்தில் மைசூர்பாக் ஸ்வீட் பாக்ஸுடன் முடிந்துபோனது மிகப் பெரிய ஏமாற்றத்தில் தொழிலாளர்களைத் தள்ளியிருக்கிறது. புத்தாண்டுப் பண்டிகையைப் போல உலகமெங்கும் கொண்டாடப்படும் ரஜினி நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்முறை பண வளையத்துக்குள் கொண்டாடப்படவிருக்கிறது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon