மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஆட்சிக்குத் துணை நிற்கும் பொதுமக்கள்!

ஆட்சிக்குத் துணை நிற்கும் பொதுமக்கள்!

‘அதிமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் பொதுமக்கள் துணை நிற்கிறார்கள். எனவே, எவராலும் ஆட்சியைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது’ என்று சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று (அக்டோபர் 23) நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டெங்குக் காய்ச்சலை பிடித்துக்கொண்டு, அதை அரசியலாக்கப் பார்க்கிறார். அது ஒருபோதும் முடியாது. டெங்கு என்பது சீதோஷ்ண நிலை மாறுபடுகின்றபோது வரும் ஒரு காய்ச்சல். அதற்கு அரசால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆட்சிக்கு டெங்கு ஆட்சி என்று ஒரு பெயரையும் ஸ்டாலின் சூட்டிவிட்டார்.

அதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திமுக ஆட்சி என்ன ஆட்சி என்று அப்போதே குறிப்பிட்டுவிட்டார். ஆகவே அப்படிப்பட்ட ஆட்சி, திமுக ஆட்சிதான். ஆனால் அதிமுகவில் நடைபெறும் ஆட்சி, மக்கள் ஆட்சி. அரசுக்கு அவர்கள் எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைக்கலாம். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செயலாற்றக்கூடிய ஆட்சி எங்களுடைய ஆட்சி.

ஆகவே, நீங்கள் எந்த சூழ்ச்சி செய்தாலும், எத்தகைய தில்லுமுல்லு செய்தாலும் இந்த ஆட்சியை கலைத்து விடுவோம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இந்தப் பொதுமக்கள்தான் எஜமானர்கள். இந்தப் பொதுமக்கள்தான் நீதிபதிகள். இவர்கள்தான் ஆட்சிக்கும், கட்சிக்கும் துணை நிற்கிறார்கள். எனவே, எதிர்க்கட்சிகள் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் இந்த ஆட்சியைத் தொட்டுக்கூட உங்களால் பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon