மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 3

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 3

சண்முகம் இயல்பான ஆசைகள்கொண்ட மிக துறுதுறுப்பான இளைஞர். பொறியியல் படிப்பு முடிந்ததும் அவருக்கு மிக நல்ல வேலை ஒன்று ஐ.டி. கம்பெனியில் கிடைத்தது. அம்மா அப்பாவுக்கு அதில் ஏக சந்தோஷம். படிப்பு, வேலை என்பது போன்ற சமூகம் எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடைபெற்ற பிறகு சமூகம் எதிர்பார்க்கும் மற்றொரு கடமையான திருமணம் பற்றி சண்முகத்திடம் அம்மாவும் அப்பாவும் பேசினார்கள். காட்டிய ஒரு சில புகைப்படங்களில் பிடித்த படத்தில் சாரதா இருந்தாள். மிக மிக எளிமையான தோற்றம். கிராமம் சார்ந்த சாயல். சன்முகத்துக்கு அவள் கண்கள் மிகவும் பிடித்திருந்தது.

பெண் பார்க்கப் போனார்கள். சண்முகம் அவளிடம் தனியாக பேசினான். வெட்கத்துக்கு நடுவே அவள் சொன்ன சில வார்த்தைகள் நீண்ட வரிகளாக அவனுள் ஒலித்தபடி இருந்தது. பெரியவர்கள் திருமண நாளை சில காரணங்களுக்காக ஆறு மாதங்கள் கழித்து வைக்க, சண்முகம் சாரதாவிடம் போனில் பேச ஆரம்பித்தான். அவளது அன்பு அவனை வேறொரு உலகத்துக்குக் கூட்டிப் போனது.

ஒருநாள் சாரதா அவனை வீட்டுக்கு அழைத்தாள். அவனைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னாள். சண்முகம் பரவசமானான். ஆனால், இருவருக்கும் இச்சந்திப்பை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று பயம். தன் அம்மா அப்பா இல்லாத ஒரு நேரத்தை சாரதா சொல்கிறாள். அப்படி வரும்போது யாரும் வந்து விட்டால் என்ன செய்ய என்று கேட்கும்போது சாரதா ஒரு பதில் சொல்கிறாள்.

“எங்க வீட்ல ஒரு வழி இருக்கு... அது வழியா நீங்க போனா நேரா பின் தெரு வந்திடும். அப்படி போயிடலாம் நீங்க.”

அந்த பதில் அந்த நேரத்தில் அன்பின் பரவச ஊற்றில் தோய்ந்து வந்ததாகவே இருந்தது. அவன் ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பனைப் பார்க்க போவதாகச் சொல்லிச்

சென்று சாரதாவை சந்தித்தான். நாளைய மனைவியைத் தனியாய் சந்திக்கும்போதான உரிமை மீறல் இயல்பாக நடக்க சாரதாவும் அதற்கு பெரிய தடை சொல்லவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே யாரும் வரவில்லை. மிக மிக சந்தோஷமாக வீடு திரும்பினான் சண்முகம்.

காதலும் எதிர்காலம் குறித்த கனவிலும் சீக்கிரமாகவே நாள்கள் கழிந்தன. திருமணம் ஆன பின், அவர்கள் தனிக்குடித்தனம் சென்றார்கள். வீட்டில் அத்தனை பேரிடமும் அத்தனை பேரன்பாய் இருந்தாள் சாரதா. அன்றாட வாழ்வின் சிக்கலும் அன்பும் காதலும் குழந்தையுமாக வாழ்க்கை சக்கரம் ஓடியது. சண்முகத்துக்கு அலுவலகத்தில் பல பதவி உயர்வுகள் வந்தன. உலகின் மிகச் சிறப்பான மகிழ்ச்சியை தான் பெற்றுவிட்டதாகவே சாரதா நம்பினாள்.

சண்முகத்துக்கு அலுவலகத்தில் சுபாஷ் என்னும் நண்பன் உண்டு. அவனது திருமண நிச்சயத்துக்கு போய் வந்த சில நாள்களில் ஒரு தேநீர் இடைவெளியில் சுபாஷ் தனக்கு மனைவியாக வர போகிறவரை எப்படி சண்முகம், சாரதாவை வைத்திருக்கிற மாதிரி சந்தோஷமாக வைக்கலாம் என்று கேட்க, சண்முகமும் விட்டுக்கொடுப்பது, விடாமல் காதலிப்பது பற்றியெல்லாம் சொல்லிவிட்டு திருமணத்துக்கு முன் இந்தக் காலமெல்லாம் பேசி பழகுகிறார்கள். அது மிக நல்லது என்று சொல்கிறான்.

சுபாஷும் அதன்படி அந்த பெண்ணிடம் பேச ஆரம்பிக்கிறான். அடுத்து அவள் வீட்டுக்கு போகும் முயற்சியை கையிலெடுக்கிறான் சுபாஷ். ஆனால், அந்தப் பெண் அதற்குத் தயாராக இல்லை. இப்படிப்பட்ட மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்குப் போய் விட்டாள். பின் சண்முகம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தான். கல்யாணம் முடிந்தது ஒருவழியாக. ஆனால், சண்முகத்துக்குள் சந்தேகம் என்னும் கொடூர அரக்கன் வந்து சப்பணமிட்டுக்கொள்கிறான்.

சுபாஷின் மனைவி கணவனாக ஆகப்போ கும் ஓர் ஆணிடமே தனியாய் பேசவோ, ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவோ தயாராக இல்லாதபோது எப்படி சாரதா அவனை வர சொன்னாள்? அவனது முன்னேற்றங்களுக்கு ஒத்துழைத்தாள்? அம்மா அப்பா வந்தால் வீட்டின் இன்னொரு வழியாக எப்படி வெளியே போக சொன்னாள்? என்று யோசித்தான். அப்படியென்றால் சுபாஷின் மனைவிதான் பத்தினி என்று தீர்மானித்தான். மனம் என்னும் மாயக்கண்ணாடி உடைந்து அவனுக்கு பல பிம்பங்களைக் காட்ட அவன் எல்லா சில்லிலும் தன் முகத்தை பார்க்கிறான். இரண்டு வருடங்கள் கழித்து தன் சக எதிரியாக சாரதாவை நினைக்கிறான்.

சாரதா யார் யாரிடம், குறிப்பாக ஆண்களிடம் பேசுகிறாள் என்பதை ஒரு சிறு டைரியில் எழுதிவைத்து அதை அன்றிரவு வரை மாறி மாறி வாசித்தபடியே இருந்தான். பின் அவளை வீட்டில் பூட்டிவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தான். மனசுக்குள் சாரதா ஏற்கெனவே பல ஆண்களுடன் பழகியதால்தான் தன்னை வீட்டுக்கு வர சொல்லி தொட அனுமதித்திருக்கிறாள் என்று தீவிரமாக நம்ப ஆரம்பித்தான். திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் அரைநாள் விடுமுறை போட்டுவிட்டு வீட்டுக்கு வருவதுபோல், வந்து வீட்டின் சகல மூலைகளிலும் இல்லாத அந்த ஒருவனை தேடுவான். வெளியூர் போய் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்வப்போது பகலிலும், அடிக்கடி இரவிலும் வந்து வீட்டுக்கு வெளியே இருந்து சாரதாவைக் கண்காணிப்பான். சண்முகம் ஏன் மாறினான், அவனுக்கு என்ன பிரச்னை என்பதை சாரதா உணரும் முன்னமே பிரச்னைகள் அவளை மூழ்கடித்திருந்தது. அதுவே அதன் பெருந்துயர்.

சதா நேரம் சண்டை. சச்சரவு. ஒரு தடவை சாரதா பொறுக்க மாட்டாமல் கத்தியபோது அவன் அமைதியாக “எத்தன பேர வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கியோ” என்று சொல்ல அதிர்கிறாள் சாரதா. அவசரமாக வீடு மாற்றுகிறான். பிறகு வீடு மாற்றியபடியே இருக்கிறான். இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து போனால் பக்கவாட்டு கண்ணாடியில் சாரதாவைப் பார்த்தபடியே வருகிறான். அவள் காற்றிலேயே கையால் வரைந்து பின்னால் வருபவர்களுக்கு தனது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டதாக நம்பினான்.

பின்னே ஆரம்பித்தது குடிப்பழக்கம். ஒருகட்டம்

விளையாட்டாக குடிக்க ஆரம்பித்தவனை இன்னொரு உச்சகட்டத்தில் குடி அவனை விழுங்கியது. குழந்தையைக் குளிப்பாட்ட கால்களில் இருத்திக்கொள்ள சேலையை சாரதா தூக்கிக் கட்டினால்கூட வார்த்தைகள் அமிலத்தில் தோய்ந்து விழுந்தன. “எவனுக்கு கால காட்டிட்டு இருக்க?”

வார்த்தை வன்முறை கரையைக் கடக்க, அவள் அமிழ்ந்து போகிறாள். அவளைக் கண்காணிக்க அவன் அம்மாவை அழைத்து வருகிறான். அவன் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யாரும் வந்துவிட கூடாதில்லையா? முதலில் தன் மருமகள்மீது சின்ன சந்தேகத்தோடு வந்த அவனது அம்மாவை அவன் இல்லாதபோது சாரதாவின் காதலர்கள் வர உதவி செய்கிறாள் என்று சந்தேகப்பட்டபோதே பிரச்னை தன் மகன்தான் என்று உணர்ந்தாள். இடையில் தாங்க முடியாத வேதனையோடு சாரதா தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, அங்கேயும் போய் பிரச்னை செய்கிறான் சண்முகம். அலுவலகத்துக்கு போவது குறைந்து, பின் போகாமலே ஆனான்.

ஒருகட்டத்தில் அப்பா, அம்மாவையே கத்தியால் குத்தியபோதுதான் அவர்கள் அவனை ஓர் அறைக்குள் பூட்டிவைத்து பின் மைண்ட் ஜோன் மனநல மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தார்கள். பல மாத சிகிச்சை. மருந்தும் ஆலோசனையும் இன்றுவரை சண்முகத்துக்குத் தொடர்கிறது. இன்றும் அவனுடன் மருத்துவமனை வரும் சாரதா மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்... ‘எப்படியாச்சும் குடிய மட்டும் விட்டுட்டார்ன்னா போதும் டாக்டர்.’

[பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன)

மீண்டும் சிந்திப்போம்... அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை!

தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா - மைண்ட் ஜோன் மருத்துவமனை

எழுத்தாக்கம்: தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 1

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon