மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கந்து வட்டிக்காரர்களிடம் காவல் துறையினர் விசாரணை!

கந்து வட்டிக்காரர்களிடம் காவல் துறையினர் விசாரணை!

கந்து வட்டி என்ற கொடூரத்தால் குடும்பமே பற்றி எரிந்த சம்பவம் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கந்துவட்டி என்பது ஒரு கொடிய நோயாக உருவெடுத்து வந்தது. இதைத்தடுக்க கடந்த 2003ஆம் ஆண்டு கந்துவட்டி தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் முறையே செயல்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். இதன் விளைவு நேற்று (அக் 23) கந்துவட்டிக்குக் கடன் வாங்கிய கூலி தொழிலாளியான நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்ததுதான்.

கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான இசக்கிமுத்து ஒரு வயது குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்தார். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு வயது குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அசலுக்கு அதிகமாக பணத்தைச் செலுத்தியும் தனக்கு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு முறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மூன்று பேர் உயிரிழந்த பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கந்து வட்டிக்காரர்கள் காளி, முத்துலெட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறியதாவது, “மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தின்போது ஆறு முறை மனு கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த மனு எஸ்.பி. அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்குப் புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், காவல் துறையினர் கந்து வட்டிகாரர்கள் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதனால் மன உளைச்சலோடு இருந்த எனது சகோதரர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon