மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

ஐ.டி. ரெய்டு: விஜய் ஸ்டைலில் சிக்கிய விஷால்!

ஐ.டி. ரெய்டு: விஜய் ஸ்டைலில் சிக்கிய விஷால்!

விஷாலுக்குச் சொந்தமான ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 51 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, அசாதாரண சூழலில் இருக்கும் தமிழகத்தில் மேலும் ஒரு பிரேக்கைப் போட்டது.

சென்னை வடபழனி குமரன் காலனி பகுதியில் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று (அக்.23) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் மத்திய கலால் துறையின்கீழ் செயல்பட்டுவரும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மாலை நேரத்தில் ஊடகங்கள் செய்தியை வெளியிட அனைவருமே பரபரப்பானார்கள். மெர்சல் திரைப்படத்துக்குத் தமிழக பாஜக தலைமைகளிடமிருந்து எதிர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக யார் வருவார் என்ற கேள்வி தனியே நின்றது. தனித்தனியாக பலரும் குரலெழுப்பினார்களே தவிர, திரைப்படங்களின் நலன் காக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தனி நடிகரின்மீது வீசப்பட்ட சுடுசொற்களிலிருந்து விஜய்யைக் காப்பாற்ற நடிகர்கள் சங்கம் ஆகியவை தொடக்கத்தில் வரவில்லை. இந்த இரு சங்கங்களின் பொதுவாக விஷால் என்ற நபரே இருப்பதாலும், தமிழ் சினிமாவின் முகமாக அவரே செயல்பட்டு வருவதாலும் அவரது குரலுக்காக மைக்குகள் காத்திருக்க, ஒருவழியாக வெளியே வந்தார்.

மெர்சல் திரைப்படத்தை ஆதரித்தும், படக்குழுவின் துணிவைப் பாராட்டியும் அறிவிப்பை வெளியிட்டார் விஷால். அப்போது, மெர்சல் படத்தை மிகக் காத்திரமாக எதிர்த்துவந்த பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால், இணையதளத்தில் படம் பார்த்த எச்.ராஜாவை விமர்சித்து பேட்டி கொடுத்தார். இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்துக்குள் வருமான வரித்துறை நுழைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ராஜா வார்த்தைக்கு வார்த்தை ரெய்டு செய்ய வேண்டும் எனச் சொல்லிவந்ததால், விஷால் அலுவலகத்துக்குள் அதிகாரிகள் புகுந்தது பரபரப்பை உண்டாக்கியது. ஆனால், ரெய்டு நடந்ததன் விளைவாக ரூ 51 லட்சம் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

விஷால் அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் ரெய்டு என சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த, ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவின் இணை இயக்குநர் பி.வி.கே.ராஜசேகர், “சென்னை மண்டலத்தைச் சார்ந்த ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. உண்மையில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் அப்படி ஒரு சோதனை நடத்தப்படவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது” என்று கூறினார்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியது யார் என்பது தெரியாத மர்மமான சூழல் உருவான நிலையில், வடபழனியில் நடைபெற்ற பட விழா ஒன்றில் கலந்துகொண்ட விஷால், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியது வருமான வரித்துறையைச் சார்ந்த அதிகாரிகள் என்று அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்த தகவலை உறுதிப்படுத்தினார்.

‘இந்தத் திடீர் சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது பாஜக தலைவர்களை விமர்சித்து கருத்து தெரிவித்ததால் உங்களைப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதா?’ என்று பத்திரிகையாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த விஷால், “நான் எந்த தலைவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கவில்லை. ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததாக எச்.ராஜா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவரே கூறினார். அதை அவர் தவிர்த்திருக்கலாம். ஒரு தேசிய கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் இவ்வாறு கூறியது அதிர்ச்சியான ஒன்றாக இருந்தது. அது உண்மையாகவே வருத்தமளிக்கிறது என்பதைப் பதிவு செய்தேன். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன், அதனால் எதற்கும் பயப்படப் போவதில்லை. ஒருவேளை என்னைப் பழிவாங்க வேண்டும் என்று ஏதேனும் உள்நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தால் நான் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார். விஷாலின் பேச்சு அதுவரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்த்தவர்களை ஓரளவுக்கு அவர் பக்கம் சிந்திக்க வைத்தது.

ஆனால், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், விஷாலின் தயாரிப்பு நிறுவனம், தாங்கள் பிடித்தம் செய்த ரூ.51 லட்சம் டி.டி.எஸ். தொகையை, வருமான வரித்துறையில் செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த உரிய ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் வரும் அக்.27ஆம் தேதி அன்று உரிய ஆவணங்களுடன் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை செலுத்தாமல் இருக்கும் ரூ.51 லட்சம் தொகையை 2 அல்லது 3 தவணைகளில் செலுத்திவிடுவதாக ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவன அதிகாரிகள் கூறியதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெர்சல் படத்துக்கு ஆதரவாகப் பேசியதற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இப்படி ரெய்டு நடத்தப்பட்டதா?’ என்ற ரீதியில் பார்க்கப்பட்ட இந்தச் சம்பவம் விஷால் தரப்பில் தவறு இருக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் தெரியவந்திருப்பதால் பரபரப்பை இழந்துவிட்டது. 2015ஆம் ஆண்டு (புலி ரிலீஸின்போது) விஜய்மீது சுமத்தப்பட்ட வருமான வரித்துறை வழக்கும் இப்போது கையிலெடுக்கப்பட்டால் மீண்டும் இதே பரபரப்பு உருவாகும் நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon