மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

முதல்வர் முன் தீக்குளிக்க முயற்சி!

முதல்வர் முன்  தீக்குளிக்க முயற்சி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேசி முடித்தவுடன் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் (அக்டோபர் 23) விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் பேசி முடித்த பிறகு நிகழ்வின் இறுதியாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதற்காக தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்றுகொண்டிருந்தபோது, செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்த இரண்டு பெண்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டனர். இதை மேடையிலிருந்து பார்த்த அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த பெண்கள்மீது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தண்ணீரை ஊற்றித் தடுத்து நிறுத்தினர்.

கந்துவட்டி காரணமாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாத நிலையில், முதல்வர் முன் இரு பெண்கள் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, தற்கொலை முயற்சி செய்துகொண்ட கனகலட்சுமியின் கணவர் முனியசாமி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் ரோந்துக்கு செல்லும் போலீஸார் இவரது வீட்டுக்கு சென்று தொடர்ந்து சோதனை செய்து வந்துள்ளனர். இந்தச் செயல்கள் அவருடைய மனைவி மற்றும் மகளுக்கு மிகுந்த மன வேதனையடையச் செய்துள்ளது. அதனால், அவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon