மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

சுகேஷ் விவகாரம்: போலீசார் கைது!

சுகேஷ் விவகாரம்: போலீசார் கைது!

தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் சுகேஷைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தவிர்த்து இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

பெங்களூருக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, சுகேஷை சுதந்திரமாகச் செயல்பட போலீசார் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. வணிக வளாகங்களுக்குச் செல்லவும் தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அவருக்கு அனுமதி கிடைத்ததாகத் தெரிகிறது. அதேபோல், பெங்களூரில் தனது தோழிகள் சிலரையும் சுகேஷ் சந்தித்தாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வருமான வரித் துறை நடத்திய விசாரணையில் சுகேஷ் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது உறுதியானது. சுகேஷிடமிருந்து விலையுயர்ந்த வாட்ச்கள், கார்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, டெல்லி போலீசார் 7 பேர், கடந்த 19ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் அவர்கள் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, சுகேஷுடன் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர் நிதின்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலர்கள் ஜீவன், ஜார்ஜ் ஆகியோரும், காவலர்கள் கேசவ் குமார், தர்மேந்தர், புஷ்பேந்தர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon