மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

வெற்றிப் பாதையில் மேயாத மான்!

வெற்றிப் பாதையில் மேயாத மான்!

மெர்சல் படம் ஒரு பக்கம் வசூலை குவித்தாலும் சத்தமில்லாமல் ரசிகர்களின் பாராட்டுகளோடு மேயாத மான் படத்துக்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்த மெர்சல் திரைப்படம் பாஜக தலைவர்கள் ஏற்படுத்திய சர்ச்சையின் காரணமாக பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. தீபாவளிக்குத் திரைக்கு வரப் பல படங்கள் தயாராயிருந்தும் மெர்சல் திரைப்படம் வெளியாவதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை இந்த ரேஸில் களமிறக்கவில்லை. வெளியாவதாகக் கூறப்பட்ட படங்களும் பின்வாங்கின. அதனால் தீபாவளியை முன்னிட்டு மெர்சல் திரைப்படத்தோடு சென்னையில் ஒருநாள் 2, மேயாத மான் ஆகிய இரு படங்கள் மட்டும் வெளியாயின.

மேயாத மான் நவம்பரில் வெளியாவதாக இருந்து பின் தீபாவளிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக வைபவ் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியின்போது, அவரிடம் பெரிய படத்தோடு போட்டி போடுவதில் தயக்கம் இல்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கொஞ்சம் இல்லை. பயங்கரமான பயம் இருந்தது. இருப்பினும் ஐந்து நாள்கள் விடுமுறை என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் மெர்சல் வெளியான சில நாள்களுக்கு எல்லோராலும் டிக்கெட் வாங்க முடியாது. மெர்சல் படம் பார்க்க முடியாதவர்களின் கூட்டம் எப்படியும் இருக்கும். அவர்களை நம்பிதான் வெளியிட்டோம். தற்போது மக்களின் வரவேற்பு காரணமாக தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “எங்களது இயக்குநர் விஜய் ரசிகர். எனவே தங்கச்சி பாடலில் தளபதியின் நடன முறையைப் பின்பற்றியிருப்பார். நான் அஜித் ரசிகன். எனவே ஆலுமா டோலுமா பாடலை இடம்பெறச் செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் முதன் முறையாகத் தயாரித்து அறிமுக இயக்குநர் ரத்னக்குமார் இயக்கியுள்ள மேயாத மான் படத்தில் வைபவ், ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளனர். காதல், நட்பு, அண்ணன் - தங்கை பாசம் எனப் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் படம் முழுவதும் இடம்பெறும் இயல்பான நகைச்சுவையே படத்தின் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon