மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

வங்கிச் சேவையில் 64% இந்தியர்கள்!

வங்கிச் சேவையில் 64% இந்தியர்கள்!

இந்தியர்களில் சுமார் 64 சதவிகிதப் பேர் வங்கிக் கணக்கை உபயோகிப்பதாகச் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நிறுவனமான இண்டர்மீடியா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், தன்சானியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் வங்கிக் கணக்கை பயன்படுத்துவோர் குறித்து 2016 செப்டம்பர் முதல் 2017 ஜனவரி வரை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முந்தைய 90 நாட்களில் வங்கிக் கணக்குப் பயன்பாடு குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வறிக்கையை இண்டர்மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 45,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 64 சதவிகிதப் பேர் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதேபோல, ஆண்களில் 47 சதவிகிதப் பேரும், பெண்களில் 33 சதவிகிதப் பேரும் வங்கி கணக்கைப் பயன்படுத்துகின்றனர். மேலும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களில் 46 சதவிகிதப் பேரும், புறநகர்களில் உள்ளவர்களில் 37 சதவிகிதப் பேரும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துகின்றனர். மொத்த வங்கிக் கணக்குகளில் சுமார் 21 சதவிகிதம் ஜன் தன் கணக்குகளாக உள்ளன. முந்தைய ஆண்டில் இது 19 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைத் தொடர்ந்து நைஜீரியாவில் 41 சதவிகிதத்தினரும், கென்யாவில் 31 சதவிகிதத்தினரும், இந்தோனேசியாவில் 30 சதவிகிதத்தினரும், வங்கதேசத்தில் 19 சதவிகிதத்தினரும், பாகிஸ்தானில் 9 சதவிகிதத்தினரும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துபவர்களாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon