மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 அக் 2017

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் 176 நிவாரண மையங்களை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல சேதங்கள் நிகழ்ந்தது. கடந்த ஆண்டு வர்தா புயலின் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. ஆனாலும் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள, மாநகராட்சி வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைப்பது, வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்துவது, மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவது, மழைக்காலத்தில் மீட்புப் படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

சென்னை மாநகராட்சியில், 1,894 கி.மீ. நீளத்தில் 7,351 மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இவற்றில் தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 61 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் நிறைவடைய உள்ளன. விரிவாக்கப்பட்ட சென்னை பகுதியில் 376 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது என்று இது குறித்து மாநகர அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 30 கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள், தூர்வாரும் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. இதன் மூலம், சென்னையில்வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் 16 சுரங்கப் பாதைகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 6 சுரங்கப் பாதைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அங்கு நீர் தேங்குவதைத் தடுக்க, அதிகத் திறன் கொண்ட 60 டீசல் பம்ப் செட்கள் தயார் நிலையில் உள்ளன. நீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, 109 இடங்களில் மீட்புப் படகுகளைத் தயார் நிலையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க 176 நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி சரியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நீர் தேங்கும் இடங்களாக மொத்தம் 859 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு 458 மோட்டார் பம்ப் செட்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால், வாடகைக்கு எடுத்து இயக்கவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு வழங்கும் திறன் கொண்ட 4 பொது சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவற்றை நிறுத்த 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்கள் மூலம், எத்தகைய பேரிடர் வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம் என அதிகாரிகள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon