மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 அக் 2017

ஐரோப்பிய ஓப்பன்: திவிஜ் சாம்பியன்!

ஐரோப்பிய ஓப்பன்: திவிஜ் சாம்பியன்!

ஐரோப்பிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி பட்டம் வென்று அசத்தினர்.

ஐரோப்பிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் (அக்டோபர் 22) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி, மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸால்ஸ்-சிலியின் ஜூலியோ பெரால்டா ஜோடியை எதிர்கொண்டது. இதில் திவிஜ் சரண் ஜோடி, 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் சான்டியாகோ ஜோடியை வீழ்த்தி ஐரோப்பிய ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றியது.

வெற்றிக்குப் பிறகு திவிஜ் சரண், "இந்த ஆண்டின் இறுதியில் ஏடிபி போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரு மாதங்கள் கடினமானதாக இருந்தது. எனக்கான வெவ்வேறு இணையுடன் விளையாடினேன். எனது விளையாட்டை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். லிப்ஸ்கியும், நானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்தப் போட்டியுடன் லிப்ஸ்கி நாடு திரும்புகிறார். நான் அடுத்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon