மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

ஹெச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

ஹெச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ’மெர்சல்’ விவகாரத்தில் நடிகர் விஜய்யை விமர்சித்துச் சில கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதையொட்டி எழுந்த சர்ச்சையால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு அவர் ஆளாகியுள்ள நிலையில் அவர் வீட்டுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. விஜய் ரசிகர்கள், இணையத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு வகையில் செயல்பட்டுவருகின்றனர்.

அதேபோல், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹெச்.ராஜா, ‘மெர்சல்' படத்தின் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன் என்று கூறித் திரைப்படத் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால், ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். “மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?” என்று அறிக்கை வெளியிட்டார். “மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் ஒருசில காட்சிகளை மட்டும்தான் நான் இணையத்தில் பார்த்தேன்” என்று விஷாலுக்குப் பதிலளிக்கும் விதமாக ராஜா விளக்கம் கொடுத்தார்.

மெர்சல் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை ராஜா எதிர்கொள்வதை அடுத்து, வடபழனி லோகையா காலனியில் உள்ள அவர் வீட்டுக்குத் தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon