மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

கந்து வட்டி கொடுமைக்கு எதிராகத் தலைவர்கள் கண்டனம்!

கந்து வட்டி கொடுமைக்கு எதிராகத் தலைவர்கள் கண்டனம்!

திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமை குறித்து ஆறு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்த நிலையில், மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கணவர் இசக்கி முத்து உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கந்து வட்டி கொடுமைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

கந்து வட்டி கொடுமையால் திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்த ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. கந்து வட்டி கொடுமைக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

கந்து வட்டி கொடுமை குறித்து பாதிக்கபட்டவர்கள் காவல் துறையிடம் புகார் அளித்தால், புகார் அளித்தவர் மீதே காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமான கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கந்து வட்டி தடுப்புச் சட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்

கந்து வட்டி கொடுமை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இசக்கி முத்துவின் குடும்பமே சாட்சியாக உள்ளது. கந்து வட்டி கொடுமையை ஒழிக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த இசக்கி முத்துவை போலீசார் மிரட்டி உள்ளனர்.

கலெக்டரிடம் 6 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அளவிற்கு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்படுகின்ற மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்திலேயே இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்த சம்பவம் நமது நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 47 பேர் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே தமிழக அரசும், காவல் துறையும் இந்தப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினை குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் தெரிவிக்க உள்ளோம்.

முத்தரசன்

கந்துவட்டிக்காரர்களுக்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர். கந்துவட்டி தடை சட்டம் இருந்தும் 3 பேர் உயிரிழந்தது, தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது. கந்துவட்டி கொடுமையை போலீசார் கட்டுப்படுத்தவில்லை.

ஹெச்.ராஜா,பாஜக தேசிய செயலர்

தமிழகத்தில் ஆன்மிக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பகுத்தறிவு என்று கூறி அடிப்படை அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு என்று கூறி பெரியாரின் ஆட்கள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனர் என்பதற்கு தீக்குளிப்புச் சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது.

இதபோல கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon