மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ப்ரோ கபடி: யு.பி., ஹரியானா வெளியேற்றம்!

ப்ரோ கபடி: யு.பி., ஹரியானா வெளியேற்றம்!

ப்ரோ கபடி லீக் போட்டியின் ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் புனேரி பால்டான் அணி வெற்றி பெற்று யு.பி.யோதா அணியை வெளியேற்றியது. மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

ப்ரோ கபடி லீக் தொடரின், லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் மும்பையில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் யு.பி.யோதா-புனேரி பால்டான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே யு.பி.யோதா அணி சிறப்பாக ஆடி புள்ளிகளை சேர்க்கத் தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் நிதின் டோமர், நிஷாங்க் ஆகியோரின் அற்புதமான ரைடுகளால், 3வது நிமிடத்தில் யு.பி.யோதா 5-0 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு புனே அணிக்கு அக்ஷய் ஜாதவ் புள்ளிக் கணக்கைத் தொடங்கினார்.

4ஆவது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் செய்த புனே அணி, 3-5 என்ற நிலையை எட்டியது. அதன் பிறகு அதிரடியாக ஆடிய யு.பி.யோதா, புனேவை ஆல் அவுட் செய்து 10-3 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு சிறப்பாக ஆடிய புனே அணி, ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் 13-15 என்ற நிலையில் இருந்தது. 17வது நிமிடத்தில் யு.பி.யோதாவை ஆல் அவுட் செய்து முதல் முறையாக முன்னிலை பெற்றது புனே. எனினும், யு.பி.யோதா கேப்டன் நிதின் டோமர் சிறப்பான ரைடு மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 18-18 எனச் சமனில் முடிந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியில் புனே அணி தனது ஆதிக்கத்தைத் தொடங்கியது. 24ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணியை மீண்டும் ஆல்அவுட் செய்து 27-19 என முன்னிலை பெற்றது. பின்னர் மீண்டு வந்த யு.பி.யோதா அணி, 33-34 என புனேவை பின்தொடர்ந்தது. பரபரப்பான இறுதிக் கட்டத்தில் சிறப்பாக ஆடிய புனே அணி, 40-38 என வெற்றி பெற்றது. புனே தரப்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 10 புள்ளிகளும், யு.பி.யோதா தரப்பில் ரிஷங்க் 15 புள்ளிகளும் கைப்பற்றினர்.

ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 69-30 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து 3ஆவது எலிமினேட்டர் சுற்றில் புனேரி பால்டான்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று (அக்டோபர் 24) மோதுகின்றன.

இன்றைய போட்டிகள்:

முதல் தகுதிச்சுற்று: குஜராத் ஃபார்ச்சூன் ஜயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி)

3ஆவது எலிமினேட்டர் சுற்று: புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் (இரவு 9 மணி)

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon