மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்டோபர் 25) நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4ஆம் நாளான நேற்று (அக்டோபர் 23) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடந்தன. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் கால பூஜைகள் ஆகியவை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 300 சிறப்புப் பேருந்துகள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. மேலும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இரு மார்க்கங்களிலும் வரும் 25ஆம் தேதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது.

மக்கள் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியதால் மாவட்டக் காவல் துறை அதிகாரி மகேந்திரன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை காவல் அதிகாரி தீபு தலைமையில், ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைப் பக்தர்கள் சிரமமின்றிப் பார்க்கப் பல இடங்களில் பிரம்மாண்டமான எல்இடி திரைகள் அமைக்கப்படுகின்றன.

சூரசம்ஹாரம் என்பது முருகப் பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்ததன் நினைவாக முருகன் ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon