மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

பட்டேல் பிரமுகரை ஒரு கோடிக்கு விலை பேசிய பாஜக!

பட்டேல் பிரமுகரை ஒரு கோடிக்கு விலை பேசிய பாஜக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குஜராத் பாஜகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. அம்மாநிலத்தின் முக்கியமான சமுதாயமான பட்டேல் இனத்தின் போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற ஹர்திக் பட்டேல் பாஜகவை பகிரங்கமாக எதிர்த்துவரும் நிலையில் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற முக்கியஸ்தர்களை பாஜக விலை கொடுத்து வாங்கிவருவதாக ‘இணைந்த’ ஒருவரே போட்டு உடைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டேல் சமுதாய முக்கியஸ்தர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவில் இணைந்தார். ஆனால் மறுநாளான நேற்று (அக்டோபர் 23) செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர பட்டேல், “என்னை அவசர அவசரமாக பாஜக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று என் கையில் பத்து லட்சம் ரூபாயைத் திணித்தனர். எனக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும், மீதி 90 லட்சத்தைப் பிறகு தருவதாகவும் கூறினர். இதோ பாருங்கள் எனக்கு அவர்கள் கொடுத்த பணம்’’ என்று அந்த பத்து லட்சம் ரூபாயையும் செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டினார்.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் காங்கிரஸ், “அண்மையில் குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குப் பணத்தாசை காட்டி இழுத்தது பாஜக. இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தோல்வி பயத்தில் பட்டேல் சமூக முக்கியஸ்தர்களைப் பணம் கொடுத்து இழுக்கப் பார்க்கிறது. இது குறித்து உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

பாஜகவோ, “குதிரை பேரம் என்பது காங்கிரசின் கலாசாரம். பாஜக என்றைக்கும் அந்த வழியில் சென்றதில்லை. இது காங்கிரசின் அரசியல் சதி. இதன் மூலம் குஜராத் மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று கனவு காண்கிறது பாஜக’’ என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon