மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

காலா அனுபவம்: சாக்‌ஷி

காலா அனுபவம்: சாக்‌ஷி

ரஜினி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் காலா படத்தில் சாக்‌ஷி அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தான் எவ்வாறு இந்த படத்தில் ஒப்பந்தமானேன் என்பது பற்றியும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பெங்களூரில் மாடலிங் துறையில் பணியாற்றிய சாக்‌ஷி தமிழில் ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காலா படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர், “ரஞ்சித் இயக்கும் புதிய படத்திற்கு ஆடிஷன் நடைபெறுகிறது என்று எனக்கு அவரது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அதில் கலந்துகொண்டேன். தனது குழந்தைகளுக்குப் போதிய வசதிகள் கிடைக்காததால் ஒரு தாய் தனது குடும்பம் மற்றும் கிராமத்தை விட்டு வெளியேறுவதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட காட்சி. ரஞ்சித் சார் முன்னிலையில் நடித்துக்காட்டினேன். அதன் பின்புதான் படத்தில் ரஜினி சார் கதாநாயகன் என்று தெரிந்துகொண்டேன்” என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்புக்கு முன்பு இரு வாரம் நடைபெற்ற ஒத்திகையில் கலந்துகொண்ட சாக்‌ஷி, “ஒத்திகைக்குப் பின்பு போட்டோ ஷூட் நடைபெற்றது. அப்போது தான் ரஜினி சாரைச் சந்தித்தேன். அவரோடு ஒரே பிரேமில் நிற்க வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு எதிர்பார்ப்பு இல்லை. அப்போது அந்த கனவு நிறைவேறியது. அவரைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நல்ல அனுபவம். நாம் நன்றாக நடிக்கும்போது தம்ஸ் அப் காட்டி வாழ்த்துவார். ஒரு முறை இயக்குநர் ரஞ்சித்திடம், இவருக்கு மொழி தெரியாவிடினும் வசனங்கள் உச்சரிப்பது கவிதைபோல் உள்ளது என்று என்னைப் பற்றிக் கூறினார். நான் வாங்கிய உயரிய விருது அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon