மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியத் திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாவட்டந்தோறும் மையங்கள் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் இதுசார்ந்த அறிவிப்பு மட்டுமே இடம்பெறுவதுதான் வழக்கம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை மேம்படுத்தப்பட்ட இணையதளம் வடிவமைத்த பின், அனைத்துக் கல்வித் துறை இணையப்பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் பொதுத் தேர்வு வினாத்தாள்களுடன், திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன.

கல்வித் துறை அதிகாரிகள், “கல்வி சார்ந்த அனைத்துச் சுற்றறிக்கைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்வையிட வேண்டும். திறனாய்வுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 1,000 பேருக்கு, ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon