மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

ஸ்டாலினுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்!

ஸ்டாலினுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்!

தங்களுக்கு எதிராக தினகரனும் ஸ்டாலினும் மறைமுகமாகக் கூட்டணி அமைத்துச் செயல்பட்டுவருவதாக எடப்பாடி அணியினர் குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்நிலையில், தினகரன் ஆதரவாளரான புகழேந்தி ஸ்டாலினை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் இடத்தில் கருணாநிதியோ, மு.க.அழகிரியோ இருந்திருந்தால் இந்நேரம் இந்த ஆட்சியைக் கலைத்திருப்பார்கள் என்று தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று (அக்டோபர் 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வாயில் இருந்து வராது. ஆனால், ஸ்டாலின் இடத்தில் கருணாநிதியோ, மு.க.அழகிரியோ இருந்திருந்தால் இந்நேரம் இந்த ஆட்சியைக் கலைத்திருப்பார்கள். கருணாநிதி வந்துவிட்டால் இந்த ஆட்சி முடிந்துவிடும். கருணாநிதி மிக வேகமாகச் செயல்படக்கூடியவர்” என்றார்.

தைரியமாகத் தேர்தலைச் சந்திப்போம் என்று ஸ்டாலின் இதுவரை கூறியதில்லை. நாங்கள் எதிர்க்கட்சி தலைவர் என்ற மரியாதையை ஸ்டாலினுக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், அவர் போலி வாக்காளர்கள் என்று திரும்பத் திரும்பப் பழையதையே பேசிக்கொண்டிருந்தால் அவருக்கான மதிப்பை இழந்துவிடுவார் என்றும் புகழேந்தி கூறினார்.

“டெங்குவால் தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு கொசு யாரைக் கடிக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட 30 தமிழக அமைச்சர்களைக் கடித்தால் போதும். தமிழகத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்” என்றும் அவர் தெரிவித்தார். கந்து வட்டிக் கொடுமை பற்றியும் குறிப்பிட்ட அவர், கந்து வட்டிக் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்கக் காரணம், கந்து வட்டிக்கு விடும் அமைச்சர்கள்தான் என்றார் அதிரடியாக.

நாகையில் அதிமுகவின் 47ஆவது தொடக்க விழாவில் பேசிய அவர், கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சைபெற்ற படத்தை வெளியிட்டால் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதால் அவரது படம் வெளியிடப்படவில்லை. தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதாலேயே தனது புகைப்படத்தை வெளியிடக் கூடாது என ஜெயலலிதா ஆளுநருக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் புகைப்படங்களைத் தற்போது வெளியிட வேண்டும் என சசிகலாவிடம் தாங்கள் போராடிவருவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon