மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

கந்து வட்டி: கணவரின் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தம்!

கந்து வட்டி: கணவரின் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தம்!

ஈரோட்டில் கந்து வட்டி கொடுமையால் கணவரின் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கந்து வட்டி கொடுமையால் மனமுடைந்த நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் நேற்று குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து மனைவி சுப்புலட்சுமியும் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கி முத்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து பல்வேறு கட்சியினரும் கந்து வட்டிக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்தத் துயரம் மறையும் முன்னே கந்து வட்டிக் கொடுமையிலிருந்து கணவரை காப்பாற்றக் கோரி பெண் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஈரோடு அருகே சூரம்பட்டியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி ரவி. இவரது மனைவி சம்பூரணம். இவர்களுக்கு விஷால் (11) என்ற மகனும், நிவேதா (13) என்ற மகளும் உள்ளனர். ரவி சிலரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நிர்பந்தப்படுத்தி ரவியின் சிறுநீரகத்தை விற்க அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரவியின் மனைவி சம்பூரணம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில் குடும்ப செலவைச் சமாளிக்க முடியாமல் எனது கணவர் சிலரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கினார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் சில ஆண்டுகளாக வட்டிக்கு மேல் வட்டியை மட்டும் கொடுத்துவந்தார். இந்நிலையில் எங்கள் ஏழ்மையை அறிந்த கடன் கொடுத்தவர்களில் ஒருவர், உன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். அதை வைத்து நீ கடனை அடைத்துவிடலாம் என்று கூறிக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தனது கணவரை கேரள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவரை உடனே மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கந்து வட்டி கொடுமை பற்றி புகார் அளிக்க 0424-2260211 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon