மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

உண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை!

உண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை!

தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சொல்லப் போனால் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க அளவிலே தினந்தோறும் தமிழகத்திலேதான் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என்று யார் போராட்டம் நடத்தினாலும் பாதுகாப்புக்கு போலீஸ் வந்துவிடும் அல்லது போராட்டக்காரர்களை கைது செய்ய போலீஸ் வந்துவிடும்.

ஆனால்... போலீஸே போராட்டம் நடத்தினால்?

ஆம். தமிழக காவல் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் செய்வதற்கு வாட்ஸ் அப் மூலமாக அழைப்பு கொடுத்துவருகிறார்கள்.

தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சங்கம் இருப்பதுபோல், காவலர்களுக்குச் சங்கம் அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது காவலர்கள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் நீண்ட நாள் கோரிக்கை.

சமீபகாலமாக பணியிலிருக்கும் காவலர்கள் பணிச்சுமையாலும் உயர் அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைகளும் காவல்துறைக்குள் அதிகரித்துவருகிறது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காவல்துறை மானியகோரிக்கையின் போது, தமிழக காவலர்களின் குடும்பத்தார் கோட்டையை நோக்கி போராட்டத்துக்கு புறப்பட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் சாதுரியமாக அந்த நேரத்தில் சமாளித்தார்கள்.

இந்த நிலையில்தான் அக்டோபர் 21ஆம் தேதி முதல், தமிழக காவலர்கள், மற்றும் உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் கோரிக்கைகளை குறிப்பிட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்துவருகிறார்கள். காவலர்களும் அதை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏழாவது ஊதியக்குழு பேச்சு வார்த்தையில் காவலர்களை முற்றிலும் ஒதுக்கிவைத்து வேடிக்கை பார்த்த அரசிற்கும், சுயநலத்தோடு செயல்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு.

அந்த வாட்ஸ் அப் தகவல்

காவலர்கள் ஒரு நாள் பணி செய்துகொண்டே மற்ற மாநிலங்களைப் போல மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தமிழக காவலர்கள் முடிவு. எங்களது கோரிக்கைகள்...

1) ஏழாவது ஊதியகுழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து, 10ஆம் வகுப்பு தரத்தில் உள்ள மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மற்ற பலன்கள் வழங்கவேண்டும்.

2) வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்கவேண்டும்.

3) மக்கள் தொகைக்கேற்ப காவலர்கள் நியமிக்க வேண்டும்.

4) சென்னையில் வழங்கப்படுவதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும்.

5) பதவி உயர்வு மற்ற துறையினருக்கு வழங்குவதுபோல் வழங்கவேண்டும்.

6) காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டும்.

மேற்கண்டவை உட்பட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30ஆம் தேதி, காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில் அடையாள உண்ணாவிரதத்தை வெற்றிபெறவைக்க வேண்டும்!

என்பதுதான் அந்த வாட்ஸ் அப் மெசேஜ்!

பணியிலிருந்தபடி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவலர்கள் தயாராகும் தகவல் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால், தமிழக காவலர்கள் உண்ணாவிரதமிருக்க ஒத்தகருத்தில் ஒற்றுமையாக

இருக்கிறார்களாம்.

முதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம்கட்டம் போராட்டம் அறிவிக்கவும் முடிவுசெய்துள்ளதாக சொல்கிறார்கள் காவலர்கள்.

உண்ணாவிரதம் போராட்டம் பற்றி ஐபிஸ் அதிகாரியிடம் கேட்டோம். ’’உண்மைதான் கேள்விப்பட்டோம்’’ என்றார்.

இதுவரை காவல்துறை என்பது தமிழகத்தில் முதல்வர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துறையாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் காவல்துறை இருக்கிறது காவலர்கள் போராட்டம் தீவிரமானால், நாடு நிலைகுலைந்து போகும் என்பதை அரசு உணரவேண்டும்!

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon