மதுரை, திருச்சி மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (அக்டோபர் 24) ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மதுரை, திருச்சி தவிர தமிழகம் முழுதும் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 250ஆக இருந்தது. அது இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் தகவல் கொடுத்து ஊழியர்களின் பலத்தை அதிகரிக்கச் சொல்லியிருப்பதாகவும், துணை இயக்குனர், இணை இயக்குனர்களுக்கும் தேவையான அளவு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
டெங்குக் காய்ச்சலைக் கண்டறியும் எலிசா சோதனைக்கு உதவும் உபகரணங்கள், ஆய்வு மருந்துகள் வாங்கக் கூடுதலாக ரூ.4 கோடியே 12 லட்சம் ஒதுக்க்கப்பட்டுள்ளன என்று சொன்ன விஜயபாஸ்கர், வருவாய்த் துறையும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றார். வட்டாட்சியர், வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அரசு சார்பில் குறும்படம் எடுக்கப்பட்டு, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் விரைவில் விழிப்புணர்வுப் பிரச்சாரமாக ஒளிபரப்ப உள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசு சார்பில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொசு ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தும்போது, அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கிறோம் என்று அமைச்சர் கூறினார். அபராதம் விதிப்பது, யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்று சொன்ன அமைச்சர், சிறிய எச்சரிக்கைக்காகவும் விழிப்புணர்வுக்காகவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
“நோயாளிகள் ஆரம்பத்தில் இரண்டு மூன்று மருத்துவமனைகளில் பார்த்துவிட்டு, நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் காய்ச்சல் அதிகரித்து உயிரிழப்பு வரை செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல் நீடித்த உடனேயே அரசு மருத்துவமனைக்கு வந்தால் குணப்படுத்த முடியும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.