மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

உடைந்த ஓடுகளைச் சரி செய்யும் பணியில் மாணவர்கள்!

உடைந்த ஓடுகளைச் சரி செய்யும் பணியில் மாணவர்கள்!

கோத்தகிரியில் பள்ளி மேற்கூரையில் உடைந்த ஓடுகளை மாணவர்களைக் கொண்டு சரி செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மிகவும் பழமையானது. பள்ளி மேற்கூரையில் போடப்பட்டுள்ள ஓடுகள் உடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் பள்ளிக்கூடத்துக்குள் தண்ணீர் தேங்கி மாணவர்கள், ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 23) மாணவர்கள் சிலர் பள்ளியின் மேற்கூரையில் ஏறி பழுதடைந்த ஓடுகளை மாற்றி சரி செய்தனர். இதைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆபத்தான முறையில் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியது குறித்து பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்துக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

“முறையான பணியாளர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். அதில், மாணவர்களை ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளியைச் சீரமைக்க வேண்டும்” எனப் பெற்றோர்கள் கூறினர்.

குரங்குகள் தொல்லையால் ஏதாவது விபரீதம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆசியர்களின் மேற்பார்வையில் இந்தப் பணி நடைபெற்றது எனப் பள்ளித் தலைமை ஆசிரியர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறினார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon