மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

அதிமுக தொடக்க நாள் விழா: தினகரன் கொண்டாட்டம்!

அதிமுக தொடக்க நாள் விழா: தினகரன் கொண்டாட்டம்!

அதிமுகவின் 46ஆவது தொடக்க நாள் விழா தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடமான ராமாவரம் தோட்டத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதிமுகவின் 46ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்வு ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் எடப்பாடி தரப்பிலிருந்து கடந்த 17ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆனால் அன்றைய தினத்தில் தினகரன் தரப்பிலிருந்து விழா கொண்டாடப்படவில்லை. “அக்டோபர் 24ஆம் தேதி சென்னை ராமாவரம் தோட்டத்தில் அதிமுக 46ஆவது ஆண்டு தொடக்க நாள் நிகழ்வு கொண்டாடப்படும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்த தினகரன், துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை, சட்ட ரீதியாகவே தலைமைக் கழகத்திலிருந்து வெளியேற்றிக் காட்டுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இன்று (அக்டோபர் 23) அதிமுக அம்மா அணி (தினகரன்) சார்பில் சென்னை ராமாவரம் தோட்டத்தில் அதிமுகவின் தொடக்க விழா தொடங்கியது. முன்னதாக அடையாறிலுள்ள தினகரன் இல்லம் தொடங்கி ராமாவரம் வரை தினகரனுக்கு கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. ராமவரம் தோட்டத்துக்கு வந்த தினகரனுக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். நுழைவு வாயிலில் அதிமுக கொடியினை ஏற்றிவைத்த தினகரன், எம்.ஜி.ஆர் சிலைக்கும், ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தங்களது அணியின் சார்பில் 46ஆவது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியின் மாணவர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய மதிய உணவும், பள்ளிச் சீருடைகளும் வழங்கப்பட்டன. மாணவர்களோடு தினகரனும் அமர்ந்து சாப்பிட்டார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட தினகரன் அணியைச் சேர்ந்த பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடத்தில் அதிமுகவின் 46ஆவது தொடக்க நாள் விழாவைக் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்தார். அதன்படி ராமாவரம் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. பன்னீரும், எடப்பாடியும் ஏற்படுத்தியது அரசியல் ரீதியான ஒப்பந்தம் அல்ல, வணிக ரீதியான ஒப்பந்தம்.

இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடு போதுமானதல்ல. இருப்பினும் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளோம். இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றவர், கடந்த முறை தான் வெற்றி பெறுகிற சூழ்நிலை இருந்த நேரத்தில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றார்.

“ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களின் பதவிகளும் விரைவில் பறிபோகும். தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று பேசினார்.

அதிமுகவின் தொடக்க விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுவதே வழக்கம், ஆனால் தலைமை கழகம் தற்போது எடப்பாடி அணியின் வசம் இருப்பதால், தினகரன் தரப்பினரால் அங்கு செல்ல முடியவில்லை. மேலும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து இரண்டு மாதங்கள் ஒதுங்கி இருப்பதாகக் கூறிய தினகரன், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தலைமைக் கழகம் செல்லவுள்ளதாகத் தெரிவித்தபோது அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதையடுத்து தினகரன் அலுவலகம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார். தினகரன் தரப்பினர் ராமவரம் தோட்டத்தில் நிகழ்ச்சி நடத்தியதற்கு இது முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon