மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 அக் 2017

முதுநிலை நீட்: ஜனவரி 7இல் தேர்வு!

முதுநிலை நீட்: ஜனவரி 7இல் தேர்வு!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என தேசிய வாரியம் அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் எம்டி, - எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி 2018 ஜனவரி 7ஆம் தேதி, கணினி வழித் தேர்வாக முதுநிலை நீட் மற்றும் எம்டிஎஸ் நீட் தேர்வுகள் நடைபெறும்.தேர்வு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும்.

முதுநிலை நீட் தேர்வு 2016 வரை, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக 8 நாட்கள்வரை நடத்தப்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும் ஒரே நாள், ஒரே வினாத்தாள் எனத் தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், 'மாடரேட்டிங்' என்ற மதிப்பெண் சமப்படுத்தும் முறையும் கிடையாது. ஒவ்வொரு கேள்வியின் சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு கேள்வியின் தவறான பதிலுக்கும் தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்காத கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் கிடையாது.

முதுநிலை நீட் தேர்வில் பங்கேற்க ஆன்லைன் பதிவை மேற்கொள்ளும் தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் பதிவுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசியத் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களை http://nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon