மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ஜாக்கி சான் மகளின் தைரியம்!

ஜாக்கி சான் மகளின் தைரியம்!

உலகப் புகழ் பெற்ற ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கி சானின் 17 வயது மகள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும், செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்‌ஷன், காமெடி நிறைந்த படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்கி சான். இவரது மகள் எட்டா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது பெண் தோழி ஆன்டி ஆட்டம் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். புகைப்படத்தின் தலைப்பில் “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக (ஓரினச்சேர்க்கையாளராக) வாழ்கிறோம்” என்று கூறியுள்ளார்.

உலகில் பலரும் பேசத் தயங்குவதும், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை வெளிப்படையாக பொதுவெளியில் பேசும் நிலையில், எட்டா வெளிப்படையாக இந்தத் தகவலை கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, LGBT ஆதரவாளர்களிடையே வரவேற்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது

தனது பெண்தோழி ஆன்டி ஆட்டம் உடனான தனது உறவு குறித்து எட்டா, “எனக்கு ஆதரவாகவும் என் மீது அன்பு செலுத்துபவராகவும் இருக்கிறார் ஆன்டி ஆட்டம். எங்கள் உறவு பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் உறவு பற்றி பலரும் நேர்மறையான கருத்து சொல்லும் அதே நேரம், பலர் கேலி பேசவும் செய்கிறார்கள். ஆனால் நான் எதிர்மறை சூழலில்தான் வளர்ந்தேன். நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன். எனது அனுபவத்தை வெளிப்படையாக சொல்லக் காரணம், இந்த விஷயத்தை சொல்லத் தயங்கும் பிறருக்கு உதவும் என்பதால் தான்” என்று தெரிவித்துள்ளார்.

எட்டாவின் பெண் தோழி ஆன்டி ஆட்டமுக்கு 30 வயதாகிறது. இவர் கனடாவை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர். தற்போது ஹாங்காங் நகரில் வசித்து வருகிறார். ஆன்டி தான் வடிவமைத்த உடைகளை இணையத்தின்மூலம் விற்பனை செய்து வருவதோடு, பார்ப்பி டால் போன்று உடையலங்காரம் செய்து அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்கி சானின் மகளைப் போலவே, ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரும் தைரியமாக தங்களது உறவுமுறை பற்றி வெளிப்படையாக பேசும் சூழல் ஏற்படும் நிலையில், தற்போது இந்த உலகத்துக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தைரியமாக வெளியே வருவார்கள்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon