மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

கந்து வட்டி கொடுமை: திரைப் பிரபலங்கள் மனநிலை!

கந்து வட்டி கொடுமை: திரைப் பிரபலங்கள் மனநிலை!

கந்து வட்டி கொடுமையால் மனமுடைந்த நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (அக்டோபர் 23) குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து மனைவி சுப்புலட்சுமியும் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கி முத்து சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கந்து வட்டி கொடுமைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் திரைப் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சுசீந்திரன்

கந்து வட்டி ஒரு பாவச்செயல், கந்து வட்டி ஒரு பெருங்குற்றம், கந்து வட்டி மனித நேயமற்ற செயல், கந்து வட்டி கொலைக்கு நிகரான செயல். கந்து வட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டபூச்சி. இவனை விட மோசமானவன், அயோக்யன், யார் என்றால் இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் பதவியில் இருப்பவர்களும் தான்.

பிரசன்னா

கடனும் வட்டியும் பணமும் பாவமும் இவையொன்றும் புரியாத போதும், தீயின் கொடுமை உணர்ந்திருக்குமே அந்த பச்சிளம் பிள்ளை! ஐயோ! வேதனை.

ஜி.வி.பிரகாஷ் குமார்

தீயின் நாக்குகள் அநீதியையும் கொடுமைகளையும் சுட்டெரிப்பது எப்போது..??. மனிதன் பணத்தினை உருவாக்கினான். இன்று பணம் மனிதனை அழிக்கின்றது. விலைமதிப்பில்லாத உயிரையும் அச்சடித்த காகிதம் பறிக்கும்.

சீனு ராமசாமி

தன் பிள்ளைக்கு தானே தீ வைத்தான் தந்தை. அய்யோ...வேதனை. காரணமான அனைத்து அதிகார புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கனும்.

எஸ்.டி.விஜய் மில்டன்

'கறுப்பு நாள்' என்று பதிவிட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி

ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்த குடும்பத்தை கேட்டு மிகுந்த மன அழுத்தமும், வேதனையும் அடைந்தேன். அந்த அலுவலகத்தில் ஓர் அதிகாரியால் கூட இந்த குடும்பத்துக்கு உதவ முடியவில்லை என்பதை நம்பமுடியவில்லை. ஆம், இப்போது சில கந்து வட்டி வாங்குபவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் அந்த 4 உயிர்கள்?அரசாங்க அதிகாரிகளே, ஏழை மக்களின் நிலைக்கு தயவு செய்து இன்னும் பரிவு காட்டுங்கள். அவர்கள் கடைசி நம்பிக்கை நீங்கள் தான் என நம்புகிறார்கள். அவர்களுக்கு சேவை செய்ய தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

விவேக்

கந்து வட்டி தொல்லையால் பலியான குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைக்கும் பொழுது மனஉளைச்சல் ஏற்படுகின்றது.

எஸ்.பி.ஜனநாதன்

அந்த கொடூரமான மரணம் என்னை கண்கலங்க செய்து விட்டது. அந்த குழந்தைகளின் மரணத்தை என்னால் தாள முடியவில்லை. பொதுவாக குழந்தை உள்ளவர்களுக்குத் தான் இழப்பின் வலி தெரியும் என்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு எல்லாருமே குழந்தைகளாக தெரிவார்கள். எனவே அவர்களுக்குத்தான் துயரம் அதிகமாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் பணத்தை வைத்தே பணம் சம்பாரிப்பது வட்டித் தொழில். இது மிகவும் மோசமான தொழில். அந்தத் தொழில் உச்சகட்டமாக இப்போது எங்கே வந்து கத்தியை வைத்திருக்கிறது என்பது தெரிகிறது.

இதே போல கந்து வட்டிக்கு எதிராகப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon