மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

கருப்பு தினமாகும் நவம்பர் 8

கருப்பு தினமாகும் நவம்பர் 8

பாஜ அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கண்டித்து வரும் நவம்பர் 8ம் தேதியைக் கருப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் இனி செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்த தினம் அன்று. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்த நோட்டுகளை வங்கிகளிலும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அவர் அறிவித்திருந்தார். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி தான் இந்த அறிவிப்பு என அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட அளவு மட்டுமே வங்கியில் பணம் எடுக்கமுடியும் என்பதால் இந்தியா முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் மிகுந்த துயரம் அடைந்தனர் . இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. விவசாயம், வியாபாரம், போக்குவரத்து, கட்டுமானம் என அனைத்துத் துறைகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பணமதிப்பழிப்பு என்பது தோல்வியடைந்த திட்டம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், வரும் நவம்பர் 8ம் தேதியுடன் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதனைக் கருப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் நரேந்திரமோடி எடுத்த தன்னிச்சையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள “பேரிடரை” கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் இந்த எதேச் சதிகாரமான, தன்னிச்சையான நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்களும், கூலித் தொழிலாளிகளும், விவசாயத் தொழிலாளர்களும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரமே இன்றைக்கு நலிவடைந்து நிற்கிறது. மக்கள் வங்கிகளின் ஏ.டி.எம். க்யூவில் கால் கடுக்க நின்று தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கினார்கள்.

ஏ.டி.எம். கார்டு இல்லாத கூலித் தொழிலாளிகள், அப்பாவி கிராம மக்கள் அல்லல்பட்டார்கள். க்யூவில் நின்று 100க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறிகொடுத்தார்கள். இவ்வளவுக்கும் பிறகு மட்டுமல்ல இப்போதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு குறையவில்லை. ஆகவே, மத்திய பாஜ அரசைக் கண்டித்து நவம்பர் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி. பணமதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டத்தில் இருந்து இதுவரை 135 மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ம் தேதியைக் கருப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதில், 18 கட்சிகள் பங்கேற்கின்றன. மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். எனத் தெரிவித்தார்.

பீகாரைப் பொறுத்தவரை, நவம்பர் 8ம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக 38 மாவட்டங்களில் பேரணிகளை நடத்தவுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை மூலமாகப் பொருளாதாரம் மட்டுமல்ல விவசாயிகள், தினக்கூலிகள், மாணவர்கள், முறைசார்ந்த மற்றும் முறைசாரா துறைகளில் பணியாற்றுவோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர் எங்கும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நாளை அக்.25 நடைபெறுகிறது. இதில், போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon