மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ஜி.எஸ்.டி.: ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட்!

ஜி.எஸ்.டி.: ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட்!

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக்கான ரீஃபண்ட் தொகையை ஏற்றுமதியாளர்கள் விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி வசூல் பணிகளை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் கவனித்துவருகிறது. ஜூலை மாதத்தில் ஏற்றுமதியாளர்கள் செலுத்திய ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரிக்கான ரீஃபண்ட் தொகையை அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. நெட்வொர்க் வெளியிடத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான முதற்கட்ட ரிட்டன் ஜி.எஸ்.டி.ஆர்-3பி ஏற்கனவே தக்கல் செய்யப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட ரிட்டன் ஜி.எஸ்.டி.ஆர்-1 இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்றுமதியாளர்கள் தங்களின் தொழில் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய பிரத்தியேக செயலி ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் வடிவமைத்துள்ளது.

இது குறித்து ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் அக்டோபர் 23ஆம் தேதியன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக்கான ரீஃபண்ட் தொகையை ஏற்றுமதியாளர்கள் விரைவில் பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரீஃபண்ட் தொகையைப் பெற்றுக்கொள்ள பிரத்தியேக ஆன்லைன் செயலி ஒன்று இந்த வாரம் முதல் ஜி.எஸ்.டி. போர்டலில் இருக்கும்” என்று அவர் கூறினார்.

அரசு தரப்புத் தகவலின்படி, ஜூலை மாதத்தில் 55.87 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர்-3பி ரிட்டன்களும், ஆகஸ்ட் மாதத்தில் 51.37 லட்சம் ரிட்டன்களும், செப்டம்பர் மாதத்தில் 42 லட்சத்துக்கும் அதிகமான ரிட்டன்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான இறுதிக்கட்ட ரிட்டன் தாக்கல் இன்னும் தொடங்கப்படவில்லை. ஜூலை - ஆகஸ்ட் காலகட்டத்தில் சுமார் 67,000 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாகக் கிடைத்துள்ளது. இதில் 5,000 முதல் 10,000 கோடி ரூபாய் மட்டுமே ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரீஃபண்ட் தொகையாக உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரீஃபண்ட் தொகையை நவம்பர் மாத இறுதிக்குள் முற்றிலுமாக வழங்கிடும் இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon