மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ஊழல் செய்திகளுக்குத் தடை: ராஜஸ்தான்!

ஊழல் செய்திகளுக்குத் தடை: ராஜஸ்தான்!

நேற்று (அக்டோபர் 23) ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதாவானது கருத்து மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது என்று பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்தக் குற்றவியல் திருத்த சட்ட மசோதாவின் சாரம் இதுதான். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மீது அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவதோ, முன் விசாரணை நடத்துவதோ கூடாது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது எந்த வழக்குப் பதிவதாக இருந்தாலும், முன் விசாரணை நடத்துவதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். பணியின்போது ஊழல், லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தாலும் அவை விசாரணைக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்படும்வரை அந்த ஊழியர்களைப் பற்றி எந்த ஒரு செய்தியோ, புகைப்படமோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை. இந்த திருந்தங்கள் தான் அந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டன. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்தனர். என்ற போதிலும் நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர் ராஜஸ்தான் மாநில குற்ற திருத்தச் சட்ட மசோதாவாக இதைத் தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டம் நிறைவேறியது.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது பாஜகவை தவிர்த்து அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன. “ஊடகத்துறையின் குரலை நெரிப்பது போன்ற இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமைப் பறிக்கும் இந்தச் செயலுக்கு ராஜஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும்“ என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத் திருத்தம் துணை நிற்கும். இதனால் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.

ஆனால், ஆளும் பா.ஜ.க ராஜஸ்தான் அரசோ அதிகாரிகளின் பணிகளைச் சரிவரச் செய்யவிடாமல் தடுக்கும் தீயசக்திகளுக்காகவே இதைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளோம்“ என்று விளக்கம் கொடுத்துள்ளது. . இந்த அவரச சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon