மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட் வைக்கத் தடை!

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட் வைக்கத் தடை!

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் பேனர், கட்-அவுட்கள் வைப்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதுவும் ஆளுங்கட்சியினர் பொதுக்கூட்டம் அல்லது விழாக்கள் நடத்தினால் பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தே கட்-அவுட் பேனர் வைக்கப்பட்டிருக்கும், தொடர்ந்து தற்போது பிறந்தநாள் விழா, திருமண விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் கட்-அவுட் வைப்பது பொதுமக்களிடையே வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் அரசின் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வரை வரவேற்று பல கிலோ மீட்டருக்கு முன்பிலிருந்தே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் பேனர் கட்-அவுட் வைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள், கட்-அவுட்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனது வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும்" குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 24) உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, "மனுதாரர் வீட்டின் முன்பு இருக்கும் பேனர்கள், கட்-அவுட்களை அகற்ற வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், "பேனர்கள் மற்றும் கட் அவுட்களில் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பான மாவட்ட நிர்வாகத்திற்கும், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசு கடிதம் எழுதுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோலவே 1959ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திறந்த வெளி விளம்பரப்படுத்துதல் சட்டத்தை அரசு அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon