மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சீமான், அமீர் விடுதலை!

சீமான், அமீர் விடுதலை!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து இன்று (அக்டோபர் 24) அவர்களை விடுவித்திருக்கிறது ராமநாதபுரம் மாவட்ட க் கூடுதல் நீதிமன்றம்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் 2008 அக்டோபர் 18ஆம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசை விமர்சித்தும் பேசியிருந்தனர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்த கியூ பிரிவு போலீசார் அதே ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே சீமான் மற்றும் அமீர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ‘தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது’ எனக் கூறிய கூடுதல் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், சீமான், அமீர் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானும் அமீரும், “இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து எங்களை விடுவித்து நீதியரசர் வழங்கியுள்ள தீர்ப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்கது. எங்களை விடுவித்த நீதியரசர் தனது தீர்ப்பில் ‘மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் உங்களது குரலைத் தடுக்க நினைக்கவில்லை. நீங்கள் பேசியதாக கூறப்படும் நாளிலோ, அதன் பின்னரோ உங்கள் பேச்சால் எந்த அசாதாரண நிகழ்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களுக்காகத் தொடர்ந்து இதுபோன்று குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மைக்கோ பாதுகாப்புக்கோ உங்கள் பேச்சு குந்தகம் ஏற்படும் வகையில் இருந்துவிடக் கூடாது' எனக் கூறியுள்ளார். இது எங்களைப் போன்றவர்களை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க வைக்கும்’’ என நீதிமன்றத் தீர்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது அக்டோபர் 24ஆம் தேதி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரித் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது. இதில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சென்னையில் கலந்துகொண்டார். மனிதச் சங்கிலியில் கலந்துகொள்ள வந்த முதல்வரை வழியில் இயக்குனர் சீமான் சந்தித்துப் பேசினார். அப்போது சீமானுடன் சிரித்துப் பேசிவிட்டுச் சென்றார் முதல்வர் கருணாநிதி. அன்று இரவுதான் சீமான் மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon