மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அம்மா உணவக உணவில் பல்லி!

அம்மா உணவக உணவில் பல்லி!

அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட ஒரு பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை எளிய மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், எனக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டது அம்மா உணவகம். சமீப காலமாக இந்த உணவகத்தில் தரம் குறைந்த உணவுகளை வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் விதமாக, தற்போது நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் பல்லி விழுந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. மணாளக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த ஏஞ்சல் என்பவர், தனது தாயார் அமலாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அம்மாவைப் பார்க்க வந்த ஏஞ்சல், இன்று (அக். 24) காலை அம்மா உணவகத்தில் இட்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் ஏஞ்சலுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து மருத்துவமனை நிவாகத்துக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கர நாராயணன், நகராட்சி நகர் நல அதிகாரி வினோத் ராஜா, மருத்துவமனை டீன் கண்ணன் ஆகியோர் உடனடியாக அம்மா உணவுகத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அந்த சாம்பார் நெல்லையில் உள்ள ஆய்வகத்துக்குச் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

ஏழை மக்கள் அதிக அளவு உண்ணும் அம்மா உணவகத்தில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon