மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகளை மாற்ற உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகளை மாற்ற உத்தரவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் வந்தது இந்த மெசேஜ். “கந்து வட்டிக் கொடுமைக்கு ஆளாகி நெல்லையில் குடும்பமே தீக்குளித்த சம்வம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் தொடங்கி ஒட்டுமொத்தமாக எல்லோரும் தமிழக அரசை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

நேற்று இரவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் முதல்வர். ‘நடந்த சம்பவம் எவ்வளவு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கு பார்த்தீங்களா... நீங்க, அங்கே இருக்கிற எஸ்.பி. எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இப்போ ஒரு குடும்பம் தீக்குளிச்ச பிறகு கந்து வட்டி புகாரை விசாரிக்கத் தனியாக ஒரு நெம்பர் கொடுத்துருக்கீங்க. உங்க மாவட்டத்துலதான் கந்து வட்டி புகாரே அதிகம் இருக்குன்னு சொல்றாங்க. அதை முன்னாடியே விசாரிச்சிருக்க வேண்டியதுதானே... ’ என்று கோபத்துடன் கேட்டாராம்.

அதற்கு கலெக்டரோ, ‘எங்ககிட்ட வரும் புகாரை நான் விசாரிச்சுட்டுதான் இருக்கேன். இதை முழுவதுமாக கண்காணிக்க வேண்டியது போலீஸ்தான். அவங்களை நான் விசாரிக்கிறேன்’ எனச் சொல்ல... எடப்பாடி இன்னும் டென்ஷன் ஆகிவிட்டாராம்.

‘அவங்க விசாரிக்கணும்.. இவங்க கண்காணிக்கணும்னு ஏன் பழியை இன்னொருத்தர் மேல போடுறீங்க? இந்த சம்பவத்துக்கு போலீஸ் மட்டுமல்ல, நீங்களும்தான் பொறுப்பு. இதையெல்லாம் நீங்க முன்னாடியே கேட்டிருக்கணும். ஒவ்வொரு வாரமும் வந்து மனு கொடுக்கிறாங்களே, அதையெல்லாம் வாங்கி விசாரிக்கிறீங்களா இல்லை அப்படியே தூக்கி தூரப் போட்டுட்டுறீங்களா?’ என விடாமல் வறுத்தெடுத்திருக்கிறார்.

அதன் பிறகு தலைமைச் செயலாளரிடமும் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘எங்களுக்கு கட்சிக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். அதைக் காரணங்காட்டி அதிகாரிங்க வேலை பார்க்காமல் இருப்பதைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. இப்போ நடந்த சம்பவத்துக்கு அதிகாரிகளோட அலட்சியம்தான் காரணம். நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் ஏத்துக்கவே முடியலை. அந்த குழந்தைங்க தீப்பிடிச்சு எரிவதைப் பார்த்ததுல இருந்து எனக்கு மனசு கேட்கவே இல்லை. இதையெல்லாம் பார்த்துட்டு எப்படி நிம்மதியா சாப்பிட முடியும்? அந்த மாவட்டத்துல இருக்கிற அதிகாரிகளை உடனே மாத்துங்க...’ என்று சொன்னாராம்.

அதற்குத் தலைமைச் செயலாளர், ‘நான் விசாரிச்சதில் கட்சிக்காரங்க சிலரின் தலையீடு இருந்ததால்தான் எந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க முடியலைன்னு சொல்றாங்க..’ என சொல்லி இருக்கிறார். ‘யாரு தலையீடு இருக்கு? அப்படி இருந்தால் என்கிட்ட முன்பே சொல்லி இருக்கலாமே... போலீஸ் ஸ்டேஷன்லயோ, கலெக்டர் ஆபீஸ்லயோ யாராவது கட்சிக்காரங்க வந்து சட்டத்துக்குப் புறம்பா எது செய்யச் சொன்னாலும் செய்யாதீங்க. எதுவாக இருந்தாலும் என் கவனத்துக்குக் கொண்டுவரச் சொல்லுங்க. இப்போ எல்லோரும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட்டுப் போயிட்டே இருக்கீங்க. என்னோட தலைதானே உருளுது...’ என வெடித்திருக்கிறார் பழனிசாமி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது.

“முதல்வர் விட்ட டோஸில் டென்ஷன் ஆன கலெக்டர் உடனே மாவட்ட எஸ்பியைக் கூப்பிட்டு வறுத்தெடுத்திருக்கிறார். எஸ்பி. அருண் சக்தியோ, ‘அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டதற்கு கந்து வட்டிக் கொடுமை மட்டும் காரணம் இல்லை... அவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சிலர் ஏமாற்றி இருக்கிறார்கள். அதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்...’ என்று ஒரு காரணத்தைச் சொன்னாராம். கலெக்டர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகாமல், எஸ்.பி. அவராகவே மீடியாவுக்கு இந்தத் தகவலைச் சொல்லிவிட்டார். இதைப் பார்த்து கலெக்டர் மறுபடியும் டென்ஷன் ஆகிவிட்டாராம்.

‘நடந்து முடிஞ்ச விஷயத்தை மூடி மறைக்க இப்படி நீங்க இதைச் சொல்ற மாதிரி இருக்கு. சி.எம். ஆபீஸ்க்கு நானே ரிப்போர்ட் அனுப்பப் போறேன். மனித உரிமை ஆணையம் என்னை ரிப்போர்ட் கேட்கிறாங்க. நீங்க சொல்ற விஷயத்தை என்னால சொல்ல முடியாது’ எனக் கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்” என்று மெசேஜ் முடிய... ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon