மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

காஷாயம் மீட்ட ராமானுஜர்!

 காஷாயம் மீட்ட ராமானுஜர்!

விளம்பரம்

ராமானுஜர் வெள்ளுடை உடுத்தி திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டபோது தனது காஷாயம், திரித்ண்டம் எனப்படும் கையில் வைத்திருக்க்கும் கம்பு ஆகியவற்றையும் தான் தினமும் திருவாராதானம் செய்யும் காஞ்சி பேரருளாளப் பெருமாளின் விக்ரகம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றார்.

அவற்றை சிஷ்யர்கள் மறைத்து எடுத்து வந்தனர். ஏனெனில் சோழ ராஜாவின் அவையில் நானே ராமானுஜர் என்று சொல்லிச் சென்றாரே கூரத்தாழ்வான்... அங்கே போனதும் அவர் ராமானுஜர் இல்லை என்பது அரசனுக்குத் தெரிந்துவிட்டது. எனவே ராமானுஜரை தேடிப்பிடிக்க ஆணையிட்டான். இந்த நிலையில் காஷாயத்தோடு திரிதண்டம் முதலான சந்நியாசியின் அடையாளங்களோடு சென்றால் ஒரு வேளை சோழ சிப்பாய்கள் ராமானுஜரை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும் என்ற நிலை ஏற்பட்டதால்தான்... ராமானுஜரின் உடைமைகளை அவரது சிஷ்யர்கள் மறைத்து எடுத்துவந்தனர்.

நீலகிரி மலைச்சாரலில் கொங்கில் பிராட்டியின் குடிலில் அமர்ந்த ராமானுஜர்... தனது திருவடிகளை வைத்தே தன்னை கண்டறிந்த கொங்கில் பிராட்டியின் உண்மையான பக்தியை கண்டு லயித்துப் போனார்.

அந்த நொடியே தனது சிஷ்யர்களிடம், தனது காஷாயம், திரிதண்டம் ஆகியவற்றை எடுத்து வரச் சொன்னார். பின் தான் நித்யமும் ஆராதனம் செய்யும் பேரருளாளப் பெருமாள் விக்ரகத்தை எடுத்து வைத்து தனது நித்ய பூஜைகளை செய்தார் ராமானுஜர்.

பின் தற்காலிகமாய் தான் தரித்திருந்த வெள்ளை வஸ்திரத்தை களைந்து வழக்கமாக தான் அணியும் காஷாயத்தை அணிந்தார் ராமானுஜர். அதோடு தனது திருமண் கொடி பொருந்திய திரிதண்டத்தையும் ஏந்திக் கொண்டார்.

வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது ஆச்சாரியரை வழக்கமான கோலத்தில் பார்ப்பதில் பல சிஷ்யர்கள் மகிழ்ந்துபோயினர். ஆனால் சிலரோ, ராமானுஜர் அருகே சென்று, ‘சுவாமி... தாங்கள் அவசரப்பட்டு வெள்ளுடை களைந்து காஷாயம் தரித்தீரோ... இன்னும் கொஞ்ச தூரம் சென்று சந்நியாச அடையாளத்தை பூண்டிருக்கலாமே?’ என்று கேட்டனர்.

அதற்கு ராமானுஜர் புன்னகையோடு பதில் சொன்னார்.

‘’கொங்கில் பிராட்டி போன்ற எனது உண்மையான சீடர்கள் அடியேனின் திருவடிகளைப் பார்த்தே என்னை அடையாளம் கண்டுகொண்டு, என்னை வணங்குகிறார்கள். அந்த நேரத்தில் நான் காஷாயத்தில் இல்லாததால், அவர்களை நான் வஞ்சித்துவிட்டவன் ஆகிறேன். இப்படிப்பட்ட சிஷ்யர்கள் இருக்கும்போது... என் அடையாளத்தை அறிந்து என்னை வஞ்சிக்க வருவர்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. எனவேதான் அடியேன் மீண்டும் காஷாயம் பூணுகிறோம், திரிதண்டம் எடுக்கிறோம்’ என்றார் ராமானுஜர்.

சொன்னபடியே கொங்கில் பிராட்டியின் இல்லத்திலேயே தனது சந்நியாச கோலத்துக்கு மீண்டார் ராமானுஜர். அவரது வாழ்வில் காஞ்சியில் முறைப்படி சந்நியாசம் ஏற்ற பிறகு முதன் முறையாக வெள்ளுடை தரித்தார் ராமானுஜர். அதையும் சில நாட்களில் களைந்து மீண்டும் தன் வழக்கமான கோலத்துக்கு மாறினார். எனவே கொங்கில் பிராட்டியின் அந்த மலைக் குடில் மிகவும் சிறப்பு மிக்க இடமாயிற்று.

இதற்முன்னால் கொங்கில் பிராட்டியின் கணவரும் ராமானுஜரை தெண்டன் சமர்ப்பித்து தன்னுடைய வணக்கத்தையும் தெரிவித்தார்.

உறு துணை யாண்டான் ஒருவன் செய் தீங்கின் உடையவர் காண்

நெறி படர் காலத் தடியிணை நீழலின் நீங்கலர் ஊண்

பெறுகிலர் வாடப் பெரிது நீ கொங்கிற் பிராட்டியகத்து

அறு சுவை யுண்டி அடி நிலை யாகி அளித்தனையே

என்பது திருநகரி நல்லான் ராமகிருஷ்ண அய்யங்கார் இயற்றிய ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி என்றா அந்தாதித் தொகுப்பின் ஏழாவது பாடல்.

இதில் கொங்கில் பிராட்டி அகத்தில் ராமானுஜர் அறுசுவை உணவு உண்டதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மிகவும் மகிழ்ந்த ராமானுஜர் கொங்கில் பிராட்டியின் கணவருக்கும், அந்த ஊரிலுள்ள அத்தனை பேருக்குமாசி வழங்கிவிட்டு அங்கிருந்து முதலியாண்டான் உள்ளிட்ட தனது சிஷ்யர்களோடு புறப்பட்டார்.

அப்போது விடையளித்த கொங்கில் பிராட்டியின் கணவர் ராமானுஜரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்.

’சுவாமி... தாங்கள் பக்கத்தில் எங்கு இருந்தாலும் சரி, ததியாரதனைக்கு பொருள் வேண்டுமென்றால், உடனே உமது சிஷ்யர் யாரையாவது அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ததியாராதனைக்கு உரிய அவ்வளவு பொருளையும் அடியேன் அனுப்பி வைக்கிறேன். இதற்கு தாங்கள் இசைய வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்கிறார்.

ராமானுஜர் புன்னகைத்தபடியே காஷாயம், திரிதண்டம் , முதலியாண்டான் உள்ளிட்ட தனது சிஷ்யர்களோடு புறப்பட்டார்.

அடுத்து அவர் சென்ற இடம் கோவையூர்.

அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரான வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்கள் தமது பாசுரப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். ராமானுஜர் புகழ் பாடி, ஆண்டாள் புகழ் பாடி, வைணவத்தின் புகழ் பாடி, பாசுரத்தின் புகழ் பாடி அழகாக இசைத்துக் கொண்டிருக்கிறார் ஜெகத்ரட்சகன் என்னும் வானம் பாடி!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon