மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

ஏரியை மீட்ட எழில் நாயகர்!

 ஏரியை மீட்ட எழில் நாயகர்!

சென்னையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும், கடந்த கால அலட்சிய நிர்வாகத்தினரிடம் இருந்தும் மீட்டெடுத்தெ பெருமை நமது மனித நேய மேயர் சைதை துரைசாமி அவர்களுக்கு உண்டு.

ஏரிக்கரை சாலை என்ற பெயரை சென்னை வாசிகள் பார்த்திருக்கலாம். ஆனால் மாநகரத்துக்குள் எந்த ஏரியும் இப்போது இல்லை. பற்பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஏரிகள் எல்லாம் நகர்களாகிவிட்டன.

இன்று நம் காலத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக் கிடந்த சென்னை மாநகரத்துக்குள் இருக்கும் ஓர் ஏரியை மீட்டு அதை சுற்றுலாத் தலமாகவும் மாற்றிய பெருமை நமது மனித நேய மேயருக்கு உண்டு.

அதுதான் சென்னை சேத்துப்பட்டு ஏரி!

இன்று சென்னை மாநகரத்துக்குள் உயிரோடு இருக்கும் ஒரே ஏரி சேத்துப்பட்டு ஏரிதான். 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில் 9 ஏக்கர் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மீதியெல்லாம் மரங்கள் அடர்ந்து காணப்படும். குடிநீருக்காகப் பயன்படுத்தும் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த பகுதியின் நிலத்தடி நீரை வளப்படுத்தும் முக்கியமான பணியை இந்த ஏரி செய்து வருகிறது. சேத்துப்பட்டு ஏரி என்றாலே அங்கே சென்றால் நாற்றமடிக்கும் என்று ஓட்டமெடுத்த காலம் போய்...சேத்துப்பட்டு ஏரிக்குள் ஒரு படகு சவாரி செல்லலாம் வா என்று சொல்லும் அளவுக்கு ஏரியை மீட்டிருக்கிறார் மனித நேய மேயர்.

1990-களில் இருந்து சேத்துப்பட்டு ஏரியை சீரமைக்கும் பல முயற்சிகள், முன்னெடுப்புகள் நடந்தன. கடைசியாக 2005-ம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் துறை சேத்துப்பட்டு ஏரி உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள 12 ஏரிகளை மீட்டெடுக்கும் விதமான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மேற்கொண்ட ஒரு விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநில அரசு, தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமான நிதிச்சேவை நிறுவனத்தை(Tamil Nadu Urban Infrastructure Finance Services Limited) ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்யப் பணித்தது. அதன்பிறகு, 2007-08-ல் மாநில அரசு 40 லட்சம் ரூபாய்களை ஏரியை தூர்வாரும் நடவடிக்கைகளுக்காகவும், ஆகாயத்தாமரையால் நிரம்பிகிடந்த ஏரியை சுத்தம் செய்யவும் அளித்தது.

ஆனாலும் சேத்துப்பட்டு ஏரிக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில்தான்... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஒத்துழைப்போடு சேத்துப்பட்டு ஏரியை அழகிய எழில் கொஞ்சும் ஏரியாக மாற்றினார் மனித நேய மேயர்.

இந்தியாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்கி வரும் அதே நேரம்... சென்னையில் மாநகரப் பரபரப்பை ஆற்றுப்படுத்தும் முக்கிய தகவமைப்பாக கடற்கரை மட்டுமே இருக்கிறது. ஆனால், படகு சவாரி செய்ய விரும்புபவர்கள், மாமல்லபுரம் அருகேயுள்ள முட்டுக்காடு சுற்றுலா தலத்திற்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையை மாற்றி தற்போது, படகு சவாரி வசதியும் சென்னை மாநகரின் மைய பகுதிக்குள்ளேயே வந்துவிட்டது. அதாவது, 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடி தளம், 1லு கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஓட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பின்புறம் சேத்துப்பட்டு ஏரி உள்ளது. வடக்கில் கே.எம்.சி. மருத்துவமனையையும் மேற்கில் ஈகா தியேட்டர் முன்புறம் உள்ள மேம்பாலத்தையும் தெற்கில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தையும் எல்லைப் பகுதியாக கொண்டு இந்த ஏரி பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது இந்த ஏரி முழுவதும் நிரம்பியது. அதையே ஆதாரமாகக் கொண்டு ஏரி தூய்மைப்படுத்தப்பட்டது. ஏரியை சுற்றியுள்ள கரைப்பகுதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஈகா தியேட்டர் மேம்பாலத்தில் இருந்து யாரும் இறங்கி விடாத வகையில் அங்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டடன.

மாநகராட்சியின் இந்த முன்னேற்பாடுகள் எல்லாம் நடத்தி முடிக்கப்பட்டவுடன் 2016 பிப்ரவரி 27 ஆம்தேதியன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.

மாமன்றக் கூட்டத்தின் கடைசி நாளில் சிறப்புரை நிகழ்த்திய மேயர் சைதையார், மாநகராட்சியின் பற்பல சாதனைகளைச் சொல்லும்போது சேத்துப்பட்டு ஏரியையும் குறிப்பிட்டார்.

’’சேத்துப்பட்டு ஏரி தி.மு.க. ஆட்சியில் பாழ்பட்டு கிடந்தது. அதனை புதுப்பித்து படகு சவாரி செய்யும் மையம், மீன்பிடித்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் முதல்வர் அம்மா. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது’’ என்று குறிப்பிட்டார் மனித நேய மேயர்.

சென்னைக்கு எழில் மட்டுமல்ல... சுற்றுச் சூழலைக் காக்கவும் கூட இதுபோன்ற ஏரிகள் புனரமைப்பு உதவுகிறது.

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

விளம்பர பகுதி

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon