மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 நவ 2017

சிறப்புத் தொடர்: முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் பகுதி 1

சிறப்புத் தொடர்: முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் பகுதி 1

தமயந்தி

கெளசி சங்கர். உடுமலைப்பேட்டையில் சாதி வெறியர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் துணைவி. சாதி ஒழிப்புக்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடும் செயல்பாட்டாளர். ‘சங்கர் தனிப்பயிற்சி மையம்’ ஆரம்பித்து இளம் வயதினருக்கும், பிள்ளைகளுக்கும் அம்பேத்கர், பெரியார் பற்றிய பாடம் எடுக்கிறார். பறை, சிலம்பம் பயிற்சிகளும் நடக்கின்றன. தற்போது சங்கரின் குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் இவர், சாதி இல்லாத சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்றும் உறுதியுடன் களப்பணி செய்யும் சமூகச் செயல்பாட்டாளராக இருக்கிறார் .

கெளசல்யா கெளசி சங்கரான பாதை...?

சங்கர் என்னைக் காதலித்தான். அவன் இழந்த அம்மாவை என்னிடம் பார்த்திருந்தான். அவன் காதலை நான் முதலில் மறுத்தேன். அதைப் பக்குவமாக ஏற்ற விதமும், அதன்பின் நட்பாகப் பழகியதில் அவன் காட்டிய கண்ணியமும் என்னையும் காதலிக்க வைத்தன. காதலித்தோம். முதன்முதலாகப் பேருந்தில் உறவினர் ஒருவர் பார்த்து என் பெற்றோரிடம் சொல்லிவிட்டார். சங்கரின் சாதி அவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது. சங்கர் எப்படிப்பட்டவன் என்று அறிந்துகொள்ளக்கூட அவர்கள் தயாரில்லை. காதலை முறியடிக்க எனக்குத் திருமணம் முடிக்கப் பார்த்தார்கள். அதற்கெனப் பல சூழ்ச்சிகளில் இறங்கினார்கள். சங்கரை இழந்துவிட முடியாது. அவனுக்கு நான் உண்மையாக இருந்தாக வேண்டிய நிலை. என் பெற்றோர், இப்போது படித்து முடியுங்கள், அதுவரை இருவரும் விலகியிருங்கள் என்றிருந்தால் சங்கரும் நானும் உறுதியாக ஏற்றிருப்போம். அதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. வேறொருவருக்கு என்னை மண முடித்து வைக்கவே துணிந்த பிறகு வேறு வழி தெரியவில்லை. நான் கெளசல்யா சங்கராக ஆனேன்.

பிறந்த ஊர், வழக்கங்கள், அம்மா அப்பா...

நான் பிறந்தது பழனி. அப்பாவின் சொந்த ஊர் மதுரை உசலம்பட்டி. பெண்ணடிமைத்தனம்தான் அந்தச் சூழலில் நான் பார்த்ததிலேயே கொடுமையானது. 12, 13 வயதுகளிலேயே திருமணம் செய்துவைப்பது ரொம்ப இயல்பாக இருந்தது. என்னை அக்கா என்று அழைத்துக்கொண்டிருந்த ஒரு சிறுமிக்குக்கூட மணமுடித்து வைத்திருந்தார்கள். இது சாதியம் காக்கத்தான் என இப்போது புரிகிறது. மற்றபடி பெற்றோர் என்மீது கொண்டிருந்த அன்பு எல்லையற்றது. எனக்கு இன்னது வேண்டும் என்று தோன்றியிருந்தாலே புரிந்துகொண்டு கேட்காமலேயே வாங்கித் தந்துவிடுவார்கள். அப்பா கோபக்காரர். அப்போதெல்லாம் பயந்துகொள்வேன். ஆனால், பாசக்காரர். அம்மாமீது கைபோட்டே தூங்குவேன். அப்படி ஒரு இரவு கைபோடாமல் தூங்கிவிட்டதற்காக அம்மா அழுதார். அதேநேரம் மன்னிக்க முடியாத சாதி வெறியர்கள். சாதி வெறிக்கு முன் அன்பு தோற்றுப் போனது. சொல்லப் போனால் என் மீதான அந்த அன்புக்குள் சாதிப் பாசமும் கலந்திருந்தது என்றுதான் தோன்றுகிறது.

உங்கள் பள்ளிப் பருவத்தில் உங்கள் கனவுகள் எப்படியிருந்தன?

எனக்கு வானூர்திப் பணிப் பெண் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. கல்லூரி செல்லும் நேரத்தில் இந்த விருப்பத்தைத் தெரிவித்தேன். அதற்கு என் வயதொத்த உறவினன் ஒருவன் குட்டைப் பாவாடை போட வேண்டும் என்று சொல்லிவிட்டான். மறுத்தார்கள். அந்த நேரத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளான செய்தியும் வரவே ஒரேயடியாக மறுத்துவிட்டார்கள்.

பொறியியல் மீது எப்போதும் நாட்டமிருந்ததில்லை. அது என் தேர்வுப் பட்டியிலிலேயே இல்லை. ஆனால், அதைத்தான் படிக்கச் சொல்லி சேர்த்துவிட்டார்கள்.

சங்கரை முதன்முதலாக சந்தித்த நொடி?

முதன்முதலில் பேருந்தில் கல்லூரிக்கு வந்திறங்கியபோதுதான் அவனை முதன்முதலில் பார்த்தேன். அவன் என்னில் எல்லாமுமாக ஆவான் என அப்போது தெரியவில்லை.

உலகின் மிக மகிழ்ச்சியான தருணம் கெளசல்யாவுக்கு என்ன?

நாங்கள் மணமுடித்த பின் சங்கர் அவன் அக்கா வீட்டுக்கு அழைத்துப் போனான். உள்ளே நுழையும்போது அவன் கைகளைப் பிடித்துக்கொண்டே நுழைந்தேன். அவன் எனக்கானவன் என்ற உணர்வு உறுதியான கணம் அது. அவனோடு கரைந்துவிட்டதான உணர்வில் இருந்த அந்த நொடி...

சாதிய அடையாளங்கள் சிறு அன்பின் முன் கொடுமைகள் செய்யுமென எதிர்பார்த்தீர்களா?

சாதி அன்பைத் தாண்டிக் கொடுமைகள் செய்யுமா எனக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். சாதி குறித்தே அப்போதெல்லாம் எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. உடுமலை நிகழ்வு நடக்கும் வரைக்கும் அவர்கள் எங்களைப் பிரிக்கச் செய்த முயற்சிகள் அனைத்துக்கும் என்மீது கொண்ட அன்புதான் காரணம் எனக் கருதியிருந்தேன். சங்கரைச் சாதியினால்தான் வெறுக்கிறார்கள் என்ற அளவில் புரிந்துகொண்டிருந்தேன். நிகழ்வுக்குப் பிறகு சாதியின் கோர முகம் என்னை நிலைகுலைய வைத்தது. அதேநேரம் நிமிர்ந்து எழவும் வைத்தது.

சங்கருக்கும் சேர்த்தே வாழ்கிறார் கெளசி. இல்லையா?

சங்கரின் குடும்பத்தில் சங்கர் இடத்தை இன்றுவரை நிரப்பிக்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சங்கரை என் செயல்பாடுகள் மூலம் உயிர்ப்பிக்க விரும்புகிறேன். அதன் தொடக்கம்தான் சங்கர் தனிப்பயிற்சி மையம்.

இந்தப் புள்ளிக்கு நகரும் பாதையில் மனம் கொந்தளிக்க எடுத்த தற்கொலை முடிவுகளை தாண்டி வந்த மனவலிமை பற்றி...

இன்று நினைத்தால் அபத்தமாக உள்ளது. தற்கொலை முயற்சிக்குப் பிறகு மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்தேன். அந்த மயக்கம் போன்ற அரைத் தூக்கத்தில் சங்கர் கனவில் தோன்றினான். திட்டினான். நான் உன்னோடு இல்லை என்று யார் சொன்னது என்றான். அவனோடு வந்த யாரோ ஒருவரிடம் பாருங்க இந்தப் புள்ள என்ன செஞ்சிருக்கு என்றான். நான் உன்னோடு எப்போதும் இருப்பேன் என்றான். இது தந்த மனவலிமை அந்த நொடியில் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப் போதுமானதாக இருந்தது. அதன்பின் கெளரவக் கொலைகளுக்கு எதிரான மேடைகளில் நிற்க நிற்க, நான் வாழ ஓர் அர்த்தம் கிடைத்தது.

கொள்கைகளின் மீதான உங்கள் காதல் பற்றி...

சாதி ஒழிப்பு மீதான காதல், சங்கர் காதலால் என்னை வந்தடைந்தது. பெண் விடுதலையில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை எனப் புரிந்துகொண்டேன். அதைத் தமிழ்நாட்டில்தான் செய்யப் போகிறோம் என்றால் அது நம் நாடாக இருந்தாக வேண்டும். சாதி ஒழிப்புக் குறிக்கோளை சங்கரின் ரத்தமே என்னிடம் சேர்த்துவிட்டது. அதற்கான பயணம் தொடங்கும்போதே பெரியாரும் அம்பேத்கரும் அதற்கான அடையாளமாய்த் தெரிந்தார்கள். அவர்களை உள்வாங்கும்போது பெண் விடுதலைக்கும் சாதி ஒழிப்புக்குமான தவிர்க்க முடியாத பிணைப்பு தெரிகிறது. அதைச் சாதிக்கத் தமிழ்நாடுதான் தளம் என்றால் அதன் விடுதலையை அதே பெரியார் உயர்த்திப் பிடிக்கிறார். ஆக, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தமிழக விடுதலை போன்ற கொள்கைகள் இன்று என்னை வழிநடத்துகின்றன. நீங்கள் சொல்வதுபோல் கொள்கைகளின் மீது காதல் என்று சொல்வதில் உடன்பாடில்லை. காதலில்கூடச் சிறைப்பட முடியாது. ஆனால், கொள்கைகளில் சிறைப்பட வேண்டும். ஏனெனில் அது மக்களுக்கானது.

வன்முறைக்கு உங்கள் அகராதியில் அர்த்தமென்ன?

இப்போதுள்ள புரிதலில் சொன்னால் எங்களுக்கு நேர்ந்தது மட்டும் வன்முறை அல்ல. ஒரு பெண் தன் காதலை வெளியே சொல்லக்கூட முடியாமல் மனதுக்குள் புதைத்துவைத்து வாழச்செய்வதே வன்முறைதான். மனதின் விருப்பங்களைக் கட்டற்ற சுதந்திரத்தோடு செய்வதை எதன் பெயரால் தடுத்தாலும் வன்முறைதான்.

அந்த இறுதிக் கணங்களின் வடு...

அதுதான் சாதி ஒழிப்புக்கான என் பயணத்துக்குப் பாதை போட்டுத் தந்தது. அதற்கு நான் தந்த விலை ரொம்பப் பெரிது. சங்கர் என்ற அன்பும் அமைதியும் நிறைந்த மனிதன், என் தாயாக மாறியிருந்து என்னுள் கரைந்திருந்த மனிதன், இப்போது இல்லை. இந்த நினைப்பு தரும் வலி எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் மட்டுமே உணரக்கூடியது. என் தனிமை உலகில் அதன் கணம் இன்னும் கூடுதலாகும். ஆனால், அதைச் சாதி ஒழிப்புச் செயல்பாடாக மாற்ற வேண்டும்; எதிர்காலத்தைச் சிறை வைத்துக்கொள்ளக் கூடாது என்ற தெளிவோடு உள்ளேன்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வெள்ளி 3 நவ 2017