மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 நவ 2017

சிறப்புத் தொடர்: முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் – பகுதி 2

சிறப்புத் தொடர்: முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் – பகுதி 2

தமயந்தி

தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ளுதல் பெண்கள் மீள்வதற்கான ஒரு யுக்தி இல்லையா?

அப்படிப் பொதுவாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆற்றுப்படுத்தல் அல்ல, துணிந்து எழுந்து எது நம்மை முடக்கியதோ அதை ஏறி மிதித்து முன்னேறுவதுதான் அதிலிருந்து மீள்வதற்கான யுக்தி. யுக்தி மட்டுமல்ல, இயல்பான செயல்பாடாகவே அதுதான் மாற வேண்டும். நான் சாதியை ஏறி மிதித்துச் சாதி ஒழிப்புப் போராளியாக மீண்டிருக்கிறேன்.

பெண்கள் சாதிய உணர்வாளர்களாக இருக்கிறார்களா?

ஒட்டுமொத்தச் சமூகமே சாதிய உணர்வில்தான் இருக்கிறது. இதில் ஆண் என்ன, பெண் என்ன? பெண்தான் சாதி காக்கும் கருவி என்பதால் அவள் இன்னும் கூடுதலாக ஒடுக்கப்படுகிறாள். அதேநேரம் நம் பணிகள் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.

சாதியிலிருந்து எப்படி விடுதலை அடைந்தீர்கள்?

நான் மனதளவில் எப்போதுமே சாதியின் சிறையில் இருந்ததில்லையே. சாதியக் குடும்பத்தின் சிறையில் அல்லது அந்தச் சூழலில் வளர்ந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னுள் எப்போதுமே சாதி இருந்ததில்லை. அதனால்தானே என் காதல் சாத்தியமானது. அதுதானே என் சமூக வாழ்வுக்கும் அடிப்படையாய் உள்ளது. சாதி ஒழிப்புப் போராளியாக அதற்கேற்ற விடுதலை வாழ்வை எனதாக்கிக்கொண்டுள்ளேன். சாதி ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் இங்கே உண்மையான விடுதலையாக அமையும்.

இன்றைய சமூகம் காதலை ஏன் கெட்ட வார்த்தையாகப் பார்க்கிறது?

சாதியைப் புனிதமானதாகப் பார்ப்பதால். காதல் சாதிக்கு எதிரி. சாதி ஒழியக் காதலே மிகச் சரியான வழி!

இன்றைய யுத்தமே சாதிய இடைநிலைகளுள்தானா?

நீட் தேர்வை இந்திய அரசு திணித்ததும் அனிதா கொல்லப்பட்டதும்கூடச் சாதிய யுத்தம்தானே! இந்தியா பார்ப்பனீய நாடுதான் என்றால் அதற்கெதிராக நாம் போராடுவதும் சாதியத்தை வீழ்த்துவதற்கான யுத்தம்தானே!

சங்கரின் கனவுகளை நிறைவேற்றுவேன், அவரின் தம்பிகளின் கல்விக்கு உதவுவேன் என்கிறீர்கள். இந்த மனம் எங்கிருந்து வசியமானது?

சாதி வெறிதான் சங்கரைக் கொன்றது. சங்கரை சாதியைக் கொண்டு இழிவாகப் பார்த்தவர்களுக்கு முன் சங்கர் குடும்பத்தில் ஒருத்தியாகவே வாழ்ந்து காட்டுவதை சாதிக்கு எதிரான செயல்பாடாகவே பார்க்கிறேன். இதுதான் என் குடும்பம் என்று நிற்பதையும் சாதி எதிர்ப்பின் வடிவமாகவே பார்க்கிறேன். அவர்களுடைய கல்விக்கு உதவுவது என்று நான் பார்க்கவில்லை. அது குடும்பத்தில் ஒருத்தியாக என் கடமை. நானும் சங்கரும் தம்பிகளும் ஒரே குடிசையில் ஒன்றாய் உண்டு, உறங்கி ஒருவருவருக்கொருவர் பிணைந்து வாழ்ந்தவர்கள். அதேநேரம் அவனின் இரண்டு தம்பிகளும் ஒருவிதத்தில் சங்கரின் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். சங்கர் குறித்த என் ஆழமான உணர்வு அவன் தம்பிகளிடத்தில் என்னையறியாமல் ஏதோ ஒருவிதத்தில் வெளிப்பட்டுவிடுகிறது. அவர்கள் என் பொறுப்பு என்றுதான் எனை அறியாமலே உணர்கிறேன். வேறு எப்படியும் இதை சொல்லத் தெரியவில்லை.

இப்போது சங்கரின் தம்பிகளுக்கு மட்டுமல்ல யார் கல்விக்கோ வேறு எதற்குமோ கேட்டாலும் செய்வேன். அது உதவி என்ற உணர்வைத் தருவதில்லை. இயல்பான கடமையாகத்தான் செய்கிறேன். காரணம், சங்கரின் நீதிக்காக நின்றவர்கள், நிற்கிறவர்களின் தன்னலமற்ற மக்களுக்கான வாழ்வு எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது. சங்கருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்கள் களத்தில் உண்மையாக நின்றார்கள். அது கண்ணுக்குத் தெரியாத மனிதர்களின் நீதிக்காக நிற்கும் மனதை எனக்குத் தந்தது. சங்கருக்குப் பிறகு எனைச் சூழ்ந்த பேரன்பு கொண்ட சமூக மனிதர்களே அந்த மனதை எனக்குத் தந்தார்கள்.

வாழ்க்கையில் தற்போது உங்களிடம் இருக்கும் கனவுகள் என்னென்ன?

நான் உருவாக்கியிருக்கும் சங்கர் தனிப்பயிற்சி மையம். சாதி ஒழிப்புச் சிந்தனையை அடுத்த தலைமுறையிடம் தொடக்கத்திலிருந்தே விதைக்கும் எண்ணமே இதற்கு அடிப்படை. பறை, சிலம்பு உள்ளிட்ட கலைகள் கற்றுத் தருவதன் வாயிலாக சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கச் செய்ய வேண்டும். இன்னும் முறையோடும் ஒழுங்கோடும் இதை வடிவமைக்க வேண்டும். பல இடங்களில் தொடங்கப்பட வேண்டும். எங்கு தொடங்கினாலும் கட்டணம் வாங்கக் கூடாது. எதுவானாலும் இலவசமாக இருக்க வேண்டும். இப்படி இன்னும் செறிவாக்கிப் பொது விதியாக்க வேண்டும். வெகுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். இதுதான் முதன்மையான நோக்கம்.

அடுத்து பறையில் நான் தேர்ச்சி பெற வேண்டும். கராத்தே வகுப்பை நிறைவு செய்ய வேண்டும். படிப்படியாக எல்லாமும் செய்வேன்.

இந்த உலகம், நாடு உங்களுக்கு எதைப் பரிசளித்திருக்கிறது?

சங்கரை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டதுதான். அதற்கு இந்தச் சாதியச் சமூகம்தானே காரணம். அதையும் தாண்டித் தோழமை உள்ளங்களை, சமத்துவத்திற்கு நிற்கும் பெரும் தமிழ்க் குடும்பத்தை, பரிசாகப் பெற்றுள்ளேன். அதற்கு நியாயம் செய்யும்படி வாழ்ந்து காட்டுவேன்.

சமூகத் தீண்டாமை என்பது சாதிச் சுவர்களில் பிரதிபலிப்பதை எப்படி தடுக்க முடியும்?

சாதி ஒழிப்பின் மூலமே தடுக்க முடியும். தீண்டாமையைத் தனியாக ஒழிக்க முடியாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போல் சிலவற்றை செய்ய முடியும். ஆனால் அந்த சட்டத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றம் எனச் சொல்லப் போனால் வருத்தமே மிஞ்சுகிறது.

கல்விக்கும் சாதிக்கும் என்ன தொடர்பிருப்பதாகக் கருதுகிறீர்கள்?

ஒரு தொடர்பும் இல்லை என்றுதான் கருதுகிறேன். தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல் என்று பாடப் புத்தகத்தில் போட்டுள்ளார்கள். ஆனால் இன்று பள்ளிக்கூடங்களில் சாதியின் அடிப்படையில் மாணவர்கள் வண்ணங்களில் கயிறு கட்ட வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாணவனும் எந்த சாதிக்காரன் என்பதை அடையாளப்படுத்துகிறார்கள். அதுவும் பள்ளிக்கூடத்தில். ஆசிரியர்கள் சிலர் சாதி சொல்லி மாணவர்களைத் திட்டுவதையும் இழிவுபடுத்துவதையும் அதனால் ஏற்படும் கொடுமைகளையும் நாம் பார்த்துத்தான் வருகிறோம். அப்படியானால் தீண்டாமை என்ற சொல்லில் ஏற்படுகிற புரிதலைத் தாண்டி சாதி ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல் என்று ஏன் இருக்கக் கூடாது? கல்வி இதைக் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும். இல்லையானால் அந்தக் கல்வியால் சமூகத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை.

சாதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு எதிரான வாழ்வும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இக்காலகட்டத்தில் இது எவ்வளவு அவசியம் என உணர்ந்திருக்கிறீர்களா?

குழந்தைகளின் கல்விக்காக சங்கர் தனிப்பயிற்சி மையம் தொடங்கி சங்கர் வாழ்ந்த இடத்திலேயே செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். கட்டணம் ஏதும் வாங்காமல் நண்பர்கள் துணையோடு நடத்தி வருகிறேன். இதன் மூலம் பிஞ்சு உள்ளங்களில் சமத்துவத்தை விதைக்க முடிகிறது. அம்பேத்கர், பெரியாரை இளம் தலைமுறையிடம் கொண்டுசேர்க்க முடிகிறது. பறை, சிலம்பு கற்றுத் தருவதன் மூலம் சாதி ஒழிப்புக்கான கலைஞர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் அவர்களை உருவாக்க முடியும் என நம்புகிறேன். குழந்தைகளிலிருந்து சாதி ஒழிப்புப் பணி தொடங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதையே செய்கிறேன். அந்த அளவில் இந்தப் பணிகள் இக்காலத்திற்கு ரொம்ப அவசியமானது என உணர்ந்திருக்கிறேன்.

இந்த நேர்காணலின் நிறைவுப் பகுதி இன்று மாலை 7 மணிப் பதிப்பில்

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வெள்ளி 3 நவ 2017