மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அடுத்து கன்னியாகுமரி!

டிஜிட்டல் திண்ணை:  அடுத்து கன்னியாகுமரி!

ஆளுனர் கைக்குப் போகிறதா ஆட்சி?

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப். “தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்ததது தொடர்ந்து கொந்தளிப்பை உண்டாக்கியபடி இருக்கிறது. ’மாநில உரிமை பறிக்கப்படுகிறது’ என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அறிக்கைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்க, எடப்பாடியோ அவரது அமைச்சர்களோ ஆளுனர் நடவடிக்கைக்கு எதிராக வாய் திறக்கவே இல்லை.

அமைச்சர்கள் சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘ஆளுனர் ஆய்வை டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசி இருக்கிறார்கள். ஆளுனரும் இந்த எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாமல், ‘எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு தொடரும்’ என்று சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் கிளம்பி இருக்கும் இந்த எதிர்ப்பு பற்றி டெல்லிக்கும் தகவல் போயிருக்கிறது.

‘அதெல்லாம் அப்படித்தான் சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ண வேண்டாம்..’ என டெல்லியில் இருந்து சொல்லிவிட்டார்களாம். ஆளுனரைப் பொறுத்தவரை எங்கெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என முன்கூட்டியே டெல்லியில் இருந்து ப்ளான் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம். அந்த லிஸ்டில் முதல் ஊர் கோவை. அதற்கு காரணம், பிஜேபிக்குச் செல்வாக்கான மாவட்டமாகக் கருதப்படும் மாவட்டங்களின் பட்டியலை எடுத்திருக்கிறார்கள். கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் அதிக அளவு செல்வாக்கு இருக்கிறது என சொன்னார்களாம். இந்த மாவட்டங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் அந்தப் பொறுப்பை ஆளுனரிடம் ஒப்படைத்ததாகச் சொல்கிறார்கள்.

அதனால் டெல்லி அசைன்மெண்ட்படி கோவை ஆய்வுக்கு பிறகு ஆளுனரின் அடுத்த விசிட் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். எடப்பாடி அரசு சரியாக செயல்படவில்லை. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரால்தான் மக்கள் பணி நடக்கிறது என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தில் இறங்கி இருக்கிறது. எடப்பாடி பேருக்கு முதல்வராக இருந்தாலும் அதிகாரங்களை ஆளுனரிடம் கொடுத்து ஆட்டிவைக்க மத்திய அரசு போட்ட திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “தன்னுடைய நாற்காலிக்கே ஒரு ஆபத்து வரப் போகிறது என்பதை எடப்பாடி தெரிந்துகொள்ளாமலா இருப்பார்?” என்ற கேள்வியைக் கேட்டது. பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப்.

“அதெப்படி தெரியாமல் இருக்கும்? எடப்பாடிக்கு எல்லாமே தெரியும். ஆளுனர் போன கோவை விழாவுக்கு எடப்பாடி போகவில்லை. ஆளுனர் கோவையிலும், திருப்பூரிலும் ஆய்வு செய்கிறார் என்ற தகவல் அவருக்கு வந்ததுமே, இது மத்திய அரசின் விளையாட்டுதான் என்பதை அவர் புரிந்துகொண்டார். வழக்கமாக டெல்லியில் பேசும் ஆட்களுடன் எடப்பாடி பேசி இருக்கிறார். ‘நீங்க சொல்றதை நாங்க செஞ்சுட்டுதானே இருக்கோம். அப்படி இருக்கும்போது, இப்போ கவர்னரை ஆய்வு செய்யச் சொல்லி இருப்பது சரியா? ஏற்கெனவே இங்கே எங்களை யாரும் மதிக்கிறது இல்லை. இதில் கவர்னரின் நடவடிக்கையால் எங்க இமேஜ் இன்னும் இங்கே டேமேஜ் ஆகிட்டு இருக்கு...’ என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

அதற்கு டெல்லியில் இருந்து பேசியவர்களோ, ‘அவர் போய் ஆய்வு செய்யுறதால உங்க இமேஜ் என்ன ஆகப் போகுது? நீங்க அதை சாதாரணமாக எடுத்துக்கோங்க. ஆளுனர் என்றால் எந்த வேலையும் பார்க்காமல் சும்மாவே இருக்கணுமா? தமிழ்நாட்டுக்கு நீங்கதான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் இதை செய்யாதீங்க... அதைச் செய்யாதீங்க என்று எங்களுக்கு நீங்க கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள் பேசுவாங்க. பேசிட்டு அடங்கிடுவாங்க. நீங்க உங்க வேலைகளை பாருங்க.. அவரு அவரோட வேலையைப் பார்ப்பாரு...’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.

இதில் எடப்பாடி ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘நம்மை அடிமைகள் மாதிரியே நடத்திட்டு இருக்காங்க. புதுவை நாராயணசாமி எப்படி அங்கே இருக்கிற ஆளுனருக்கு எதிராகப் பேசினாரோ அதே மாதிரி நாம பேசி இருக்கணும். நாம அமைதியாக இருக்கிறதால அவங்க ஏறி மிதிச்சுட்டு இருக்காங்க..’ என்று பன்னீரிடம் கோபத்துடன் எடப்பாடி சொன்னதாகச் சொல்கிறார்கள். அதற்கு பன்னீரோ, ‘நீங்கதான் பேசணும். நீங்க இருக்கும் போது நாங்க எப்படி பேச முடியும்’ என நைசாகக் கழன்றுகொண்டாராம்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு, சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வியாழன், 16 நவ 2017

அடுத்ததுchevronRight icon