மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

புதிய விலை: ஸ்டிக்கர் ஒட்டக் கால அவகாசம்!

புதிய விலை: ஸ்டிக்கர் ஒட்டக் கால அவகாசம்!

நவம்பர் 10ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட 178 பொருள்களின் வரியைத் தளர்த்தி புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. வரி மாற்றம் செய்யப்பட்ட பொருள்களின் புதிய விலை அடங்கிய ஸ்டிக்கர்களை டிசம்பர் மாத இறுதிக்குள் அப்பொருள்களில் ஒட்டி விற்பனை செய்வதற்கு டிசம்பர் மாத இறுதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில் மக்களின் அத்தியாவசியப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட 178 பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை, 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக மத்திய அரசு அதிரடியாகக் குறைத்தது. இந்த நிலையில் புதிய விலை அடங்கிய ஸ்டிக்கரை பயன்படுத்தும்படி மத்திய விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற்கு டிசம்பர் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ஜி.எஸ்.டி. அமலான ஜூலை மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்குப் பொருந்தும்.

பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் பழைய விலையிலேயே பொருள்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதித்துறை செயலாளரான ஹஸ்முக் அதியா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon