மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ராகுல் காந்தி தலைவரானால் வரவேற்போம்!

ராகுல் காந்தி தலைவரானால் வரவேற்போம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, விரைவில் திருச்சியில் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ‘ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் வரவேற்போம்’ என்றிருக்கிறார்.

திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நவம்பர் 25ஆம் தேதியன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை, நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைத்தார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தேர்தல் கூட்டணி குறித்து, தமாகா இப்போது எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை” என்றார். “இனிமேல், தமிழக சட்டமன்றத்தில் எந்தக் கட்சியும் 118 உறுப்பினர்களைப் பெற முடியாது. மக்கள் அதற்குத் தயாராக இல்லை. எல்லா கட்சிகளின் செயல்பாடுகளையும் மக்கள் பார்த்துக்\கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது வரிப்பணம் வீணாகக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., விவசாயப் பிரச்னை போன்றவற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தமிழக அரசு செயல்பாடுகள் மீதும், மக்களுக்கு திருப்தி இல்லை.

மத்திய - மாநில அரசுகள் தமிழக மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் உள்ளது. தற்போதுள்ள நிலையில் கவர்னர் ஆய்வு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. டிசம்பர் மாதம் ஆட்சி கலைப்பு என்பது போன்ற தகவல்களைத் தவிர்க்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

தற்போதைய தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன், “ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் வரவேற்போம்” என்றார். “மதச்சார்பற்ற அணிக்குத் தலைவராக, இன்றைக்கு இருக்கும் தேசியத் தலைவர்களில் இளைஞராக, அனுபவம் வாய்ந்தவராகச் செயல்படுகிறார் ராகுல் காந்தி. அதனால், அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும்” என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார் ஜி.கே.வாசன். இந்த நிலையில், ராகுல் பற்றி திறந்த மனதுடன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon