மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

அறிவியல்: இறந்தும் இறக்க மறுக்கும் நட்சத்திரம்!

அறிவியல்: இறந்தும் இறக்க மறுக்கும் நட்சத்திரம்!

சைபர் சிம்மன்

சூப்பர் நோவா பற்றியும், கோட்பாடுகளுக்குப் பிடிபடாத அதன் விநோதத் தன்மையை விளங்கிக்கொள்ள முடியாமல் விடை தேடிக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் தேடலையும்தான் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் விளக்குத் திரியைக் கொஞ்சம் கற்பனை செய்துகொள்வது விஞ்ஞானச் சிக்கலை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.

விளக்கில் எண்ணெய் தீர்ந்துபோகும்போது, ஜோதியின் பிரகாசம் மெல்ல மங்கி, சிறு வெடிப்பு சத்தத்துடன் அடங்கி அணைந்து போய் புகையை வெளிப்படுத்தி அமைதியாகிவிடும் அல்லவா? இதற்கு மாறாக எண்ணெய் தீர்ந்த பிறகும் திரி அணையாமல் சிறு சிறு வெடிப்புகள் கேட்கத் தொடர்ந்து பிரகாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? எண்ணெய் இல்லாமல் எரியும் திரியும் தீராமல் தொடர்ந்துகொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?

ஏறக்குறைய இதே போன்ற தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் சூப்பர் நோவா ஒன்றுதான் விஞ்ஞானிகளைத் திகைப்பில் ஆழ்த்திக் குழம்ப வைத்திருக்கிறது. இதென்ன விநோதம் எனப் புரியாமல் இதற்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

நட்சத்திர வெடிப்பு

சூப்பர் நோவா பற்றியே தனியே விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்குச் சுருக்கமான அறிமுகத்தோடு விஷயத்துக்குத் தாவிவிடலாம். நட்சத்திரங்கள் நமக்குத் தெரியும். நட்சத்திரங்கள் இறந்துபோவதும் உண்டு. ஆனால், நட்சத்திரங்கள் சாதாரணமாக இறப்பதில்லை. அவை கோலாகலமாக உயிரை விடுகின்றன. திடிரென வெடித்துச் சிதறி அவை இல்லாமல் போகின்றன. இந்த வெடிப்பால் பெரும் பிரகாசம் ஏற்படுவதுண்டு. சும்மாயில்லை; இந்தப் பிரகாசம் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் ஒளிரச்செய்யக் கூடியது என்கின்றனர். அது மட்டுமா, அவை வெளிப்படுத்தும் ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய மொத்த ஆற்றலைவிட அதிகம் எனக் கூறி வாயைப் பிளக்க வைக்கின்றனர்.

இப்படி நட்சத்திரங்கள் இறக்கும்போது ஏற்படும் நிகழ்வே சூப்பர் நோவா எனச் சொல்லப்படுகிறது. வெடித்துச் சிதறிய பிறகு பல மாதங்களுக்கு அதன் பிரகாசம் ஒளிரும். பின்னர் மெல்ல மங்கி மறைந்துவிடும். அதன் பிறகு அந்த நட்சத்திரம் நியூரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையாக மாறிவிடும் என்கிறது விஞ்ஞானம். சூப்பர் நோவாவின் பயனாகத்தான் கனரக உலோகங்கள் உருவாகின்றன.

பொதுவாகக் கொஞ்சம் ஓவர் வெயிட்டாக இருக்கும் நட்சத்திரங்கள் இப்படி உயிரைவிட்டு சூப்பர் நோவாவாக ஆகும் என்கின்றனர். சூரியனைவிட எட்டு மடங்குகொண்ட நட்சத்திரங்கள்தான் சூப்பர் நோவாவாக ஆகிக்கொண்டிருகின்றன.

எப்படி உருவாகிறது சூப்பர் நோவா?

சூப்பர் நோவா இருவிதங்களில் நிகழலாம். ஒன்று நட்சத்திரங்கள் அருகே உள்ள வஸ்துவை எல்லாம் தனக்குள்ளே சேர்த்துக்கொள்ளத் தொடங்கி அதன் பயனாக மாபெரும் அணு உலை இயங்கத் தொடங்கிப் பற்ற வைத்துவிடுவதால் சூப்பர் நோவா உண்டாகலாம். இது முதல் ரகம்.

இதற்கு மாறாக ஒரு நட்சத்திரம் தன்வசம் எரிபொருள் எல்லாம் தீர்ந்துபோய் இனியும் ஒளிர முடியாது எனும் நிலையில் தன் சொந்த எடை தாங்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி சூப்பர் நோவாக மாறுவது உண்டு. இது இரண்டாவது ரகம்.

பிரபஞ்சத்தில் சூப்பர் நோவாக்கள் சர்வ சகஜமாக நிகழ்வதாகச் சொல்கின்றனர். பால்வெளி மண்டலத்தில் (Galaxy) 50 ஆண்டுக்கு ஒரு முறை சூப்பர் நோவா நிகழ்வது வழக்கம் என்றாலும் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு மூளையில் ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. என்ன, அவை எல்லாம் பூமியில் இருந்து பல லட்சம் ஒளி ஆண்டுத் தொலைவில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

விநோத நட்சத்திரம்

சூப்பர் நோவா பற்றி விஞ்ஞான உலகம் இத்தனை விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தாலும், குறிப்பிட்ட ஒரு சூப்பர் நோவா மட்டும் இந்த கோட்பாடுகளுக்குள் அடங்க மறுத்து விஞ்ஞானிகளை விழிக்க வைத்திருக்கிறது. ஐபிடிஎப்14எச்எல்எஸ் (iPTF14hls) எனக் குறிப்பிடப்படும் சூப்பர் நோவாதான் இப்படி விஞ்ஞானிகளைப் பாடாகப் படுத்திக்கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு இந்த சூப்பர் நோவா அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் உள்ள ஆய்வுக்கூட ராட்சதத் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது. இதன் தன்மைகளை ஆய்வு செய்த பிறகு இது இரண்டாம் ரக சூப்பர் நோவா என தெரியவந்தது. லயர் ஆர்கவி (Iair Arcavi) எனும் வானியல் விஞ்ஞானியின் குழுதான் இதைக் கண்டறிந்தது. இக்குழு வானியல் தொடர்பான வேறு பல முக்கிய ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்ததால் முதல்கட்டப் பதிவுக்குப் பிறகு இந்த விநோத சூப்பர் நோவாவைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டனர்.

ஆனால், 2015ஆம் ஆண்டுவாக்கில் ஆர்கவியின் மாணவர் ஜெங் சியோன் வாங் என்பவர், இந்த சூப்பர் நோவா முந்தைய மாதங்களில் கொஞ்சம் பிரகாசமாகிவிட்டதைக் கவனித்திருக்கிறார். இதற்கான தரவுகளைக் காண்பித்து, இது வழக்கமானதுதானா என்று கேட்டிருக்கிறார். “நிச்சயமாக இல்லை. சூப்பர் நோவாக்கள் இப்படி நடந்துகொள்ளாது” எனக் குழப்பத்துடன் ஆர்கவி பதிலளித்திருக்கிறார்.

ஏனெனில் ஒரு நட்சத்திரம் சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறத் தொடங்கிய பின், அதன் பிரகாசம் குறைந்துவிடும். ஆனால், இங்கு அவ்வாறு நிகழவில்லை. இதற்கு என்ன காரணம் இருக்கலாம் என யோசித்த ஆர்கவி, நம் கேலக்ஸியில் வெடித்துச் சிதறிய உள்ளூர் நட்சத்திரமாக இது இருக்க வேண்டும் அதனால்தான் பளிச்செனத் தெரிகிறது என நினைத்தார். ஆனால், அதன் ஒளிக் கூறுகளை ஆய்வு செய்து பார்த்தபோது அது எங்கோ தொலைநோக்கி காணா தூரத்தில் 500 மில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் இருப்பது தெரியவந்தது.

மேலும் குழப்பம்...

அது மட்டும் அல்ல, 100 நாள்கள் ஆன பிறகு அந்த சூப்பர் நோவா 30 நாள்களின் தன்மையையே கொண்டிருந்தது. 100 வயதான மனிதர் 30 வயதுத் தோற்றத்துடன் இருப்பதுபோல என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது அதன் வெடிப்புத்தன்மை 60 நாள் ஆன நிலையிலேயே இருந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அண்மையில் பார்த்தபோது அது இன்னும் ஒளிர்ந்துகொண்டிருந்திருக்கிறது. தோன்றி மூன்று ஆண்டு ஆன பிறகும் அது ஒளிர்ந்துகொண்டிருக்கிறது, மூலப் பிரகாசத்திலிருந்து அதன் கதிர்கள் மங்கத் தொடங்கியிருந்தாலும், அது இன்னமும் ஒளிர்ந்துகொண்டிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இதுவரை அறிந்த கோட்பாடுகள் அல்லது மாதிரிகள் எதுவும் இந்த விஷயங்களை விளக்குவதாக இல்லை என்று ஆர்கவி ஸ்பேஸ்.காம் இதழுக்கு அளித்த பேட்டியில் வியப்புடன் கூறியிருக்கிறார். “இந்த சூப்பர் நோவா இன்னும் மங்கலாம் அல்லது மேலும் பிரகாசமாகலாம் அல்லது காணாமல் போகலாம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். என்ன ஆகும் என கணிக்க முடியாது என்பதே விஷயம். இது ஒரு விதத்தில் அறிவியலுக்குச் சவால் விடும் நிகழ்வுதான்.

“இது என்ன என்று தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியும் என்றும் தோன்றவில்லை. என்னதான் நடக்கிறது என்றும் புரியவில்லை” என கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் ஸ்டான்போர்டு வூஸ்லி என்பவர் கூறியிருக்கிறார். இவர் இந்த ஆய்வில் தொடர்பில்லாதவர். ஆனால் இது நடந்திருப்பதால் இதற்கான விளக்கத்தைக் கண்டறிய வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதில் என்ன குழப்பம் என சாமானிய மனது விழிக்கலாம். சூப்பர் நோவா நிகழ்வு என்பது நட்சத்திரத்தின் கடைசிக் காலத்தில் நிகழ்வது. அது வெடித்துச் சிதறி ஒளி வீசிக் காணாமல் போக வேண்டும். வழக்கமாகச் சில மாதங்களில் சூப்பர் நோவா நிகழ்வு முடிவுக்கு வந்துவிடும். அதற்கு மாறாக மூன்று ஆண்டுகளாக ஒரு சூப்பர் நோவா ஒளிவீசிக் கொண்டிருக்கிறது என்றால் என்ன பொருள்? அது இன்னும் இறந்து போய்விடவில்லை என்றுதானே அர்த்தம். இறக்கும் நிலைக்கு வந்துவிட்ட பிறகும் அந்த நட்சத்திரம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது எப்படி என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இரு விதமான விளக்கங்கள்

இதற்கு விடை தேடும் விஞ்ஞானிகள் இரு விதமான உத்தேச விளக்கங்களை அளிக்கின்றனர். முதல் விளக்கம் ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டில் வரும் பிரபலமான E = mc2 சமன்பாடு சார்ந்தது. ஆற்றலை உணர்த்தும் இந்தக் கோட்பாடு, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறிக்கொள்ளக் கூடியது என்றும் உணர்த்துகிறது. இதன்படி பார்த்தால் நட்சத்திரங்கள் பருப்பொருளை எரிபொருளாக்கி எரிகின்றன. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற லேசான வஸ்துகள் இப்படி எரிபொருளாக்கப்பட்டு, அதைவிட கனமான வஸ்துகளாகி மையப் பகுதியில் குவிகின்றன. இந்த வெப்பநிலை ஒரு பில்லியன் டிகிரிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்போது எலெக்ட்ரான் மட்டும் அல்ல, ஆண்டிபார்டிகல் எனச் சொல்லப்படும் வேறு வகை அணுத்துகளும் உண்டாகக்கூடும். அது மட்டும் அல்ல, இத்தகைய கொதி நிலையில், மையப் பகுதியில் மேலும் வெப்பநிலை அதிகரித்து (2 பில்லியன் டிகிரி) அங்குள்ள பிராண வாயு வெடித்துச் சிதறி அணு உலைச் செயல்பாட்டை ஆரம்பித்து வைக்கிறது. இதன் காரணமாக சூப்பர் நோவா மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆனால், இந்த விளக்கத்திலும் போதாமைகள் இருப்பதாகச் சொல்கின்றனர். இன்னொரு விளக்கத்தின்படி, சூரியனைவிட 20 – 30 மடங்கு பெரிதான நட்சத்திரம் சூப்பர் நோவா நிகழ்வுக்குப் பிறகு, சுழலும் நியூரான் நட்சத்திரமாகி விடலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்றரை சூரியன் எடையை நியூயார்க் நகரம் அளவுக்குக் குறைத்துவிடும் இந்த நியூரான் நட்சத்திரங்கள் நொடிக்கு ஆயிரம் முறை சுழலும் தன்மை கொண்டிருக்கலாம். இந்த சுழற்சியின் விளைவாக வெளிப்படும் காந்த மண்டல ஆற்றல் சூப்பர் நோவா மிச்சங்களாக அமைவதாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்த விளக்கத்திலும் பல ஓட்டைகள் இருக்கின்றனவாம்.

அதனால் இந்த விநோத நிகழ்வைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போதைக்கு இது வானவியலில் புரியாத புதிர் என்றாலும் இதற்கு விடை காண்பதுதான் எங்கள் வேலை என வூஸ்லி உற்சாகமாக சொல்கிறார்.

அறிவியலின் தேடல் தொடர்கிறது.

கட்டுரைக்கான இணைப்பு: space.com

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon