மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 நவ 2017

ஹெல்த் ஹேமா - திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவக் குணங்கள்!

ஹெல்த் ஹேமா - திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவக் குணங்கள்!

எதுவுமே நாம் பயன்படுத்தினால் அதன் அருமை தெரிவதில்லை. வெளிநாட்டுக்காரர்கள் பயன்படுத்தினால் அது உயர்வாகவும் மதிப்பானதாகவும் தோன்றும். உதாரணத்துக்கு வேப்பங்குச்சி, இளநீர், மஞ்சள், பழைய சாதம்... இன்னும் பல. சரி, தெரிந்த பச்சிலைகளில் தெரியாத மருத்துவக் குணங்கள் இருப்பதில் ஒன்று திருநீற்றுப் பச்சிலை. அதன் பயன்களைப் பார்ப்போமா...

பூக்களுக்கு மணம் உண்டு. சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இதன் பயன்களும் பல!

* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

* இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

* திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

* காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* முகப்பருவை விரட்ட திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். அதேபோல், இதன் விதையைப் பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டுவந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.

* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்துவந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக் கோளாறுகள் சரியாகும்.

* திருநீற்றுப் பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

* 5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டைச் சூடு சரியாகும்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon