மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

மீனவர்கள் கடல் பழங்குடிகள்!

மீனவர்கள் கடல் பழங்குடிகள்!

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, ‘மீனவர்களைக் கடல் பழங்குடி இனத்தவர்களாக அறிவித்து, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மதிமுக தலைவர் வைகோ.

இந்தியத் துணைக்கண்டம், 6,086 கிலோமீட்டர் நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. அதில், தமிழகக் கடற்கரையின் நீளம் சுமார் 1,000 கிலோமீட்டர். கடலில் இறங்கும் மீனவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதியன்று, மீன்பிடித்தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் ஒன்று கூடினர்.

அந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதற்கு எதிராக, உலக அளவில் உரிமைக்குரல் கொடுக்க மீனவ அமைப்புகள் முடிவெடுத்தன. அன்றிலிருந்து, நவம்பர் 21 உலக மீனவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டு, தமிழக மீனவர்களின் நலன் சார்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மதிமுக தலைவர் வைகோ.

“ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவை, சட்டமன்ற, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்திய அரசு. கச்சத்தீவுக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட தொலைவு 18 கி.மீ. மட்டுமே. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலைமன்னாரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது கச்சத்தீவு.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, ஒப்புதல் பெறாமல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதித்துள்ளேன்” என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் வைகோ. “கடலில் ரத்தமும் கண்ணீரும் சிந்தாத நாளே, மீனவருக்கு நன்னாள்” என்றிருக்கிறார்.

“ஊதியம் பெறாமல் கடல் எல்லையைப் பாதுகாத்துவரும் மீனவர்களை கடல் பழங்குடி இனத்தவர்களாக (Sea Tribes - ST) அறிவித்து, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். பாரம்பர்ய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவித்திட, இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களையும், தேவைப்படும் இடங்களில் தூண்டில் வளைவுகளையும் அமைத்துக்கொடுத்து, நைந்து போயிருக்கும் நெய்தல் நில மீனவர்களைப் பாதுகாத்திட, மத்திய மாநில அரசுகள் கடமையாற்றிட வேண்டும்” என்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் வைகோ.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon