மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: அமைப்புக்குள் வருகிறார்களா அமைப்புசாரா தொழிலாளர்கள்?

சிறப்புக் கட்டுரை: அமைப்புக்குள் வருகிறார்களா அமைப்புசாரா தொழிலாளர்கள்?

ஜெ.ஜெயரஞ்சன்

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு முடிவில் அது வெற்றியா, தோல்வியா என்று ஊடகங்களில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. அது ஒரு பொருளாதாரப் பேரழிவு என எழுதியும், பேசியும் வருகிறோம். இதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் எழுந்தபோதும் ஆளும் பாஜகவினர் பல வெற்றிகளைச் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகக் கருதத்தக்கது அமைப்புசாரா பொருளாதாரத்தை அமைப்புக்குள் கொண்டு வந்துள்ளதாக (Formalisation of Imformal) மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அமைப்புசாரா தொழில்கள் எல்லாம் GST வலைப்பின்னலுக்குள் வருவதால் அவர்கள் எல்லாம் ரசீது கொடுத்தும், பெற்றும், வரி செலுத்தியும் அமைப்புக்குள் வந்து விடுவதால் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் அமைப்புக்குள் வந்துவிடுவார்களாம். அரசைப் பொறுத்தவரை அதிக வட்டி வசூலிப்பவர்களின் வேகத்தோடு வரியை வசூலிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரியைக் கூடுதலாக வசூலிக்கவும் தயங்கவில்லை. எதிர்ப்புக் குரல்களை எல்லாம் தேச பக்தியைக் காட்டி அடக்குவதும் ஒடுக்குவதும் நடக்கிறது. ஆனால் மக்கள் மன்றம் குறித்த அச்சம் வராமல் இல்லை. அதனால்தான் நவம்பர் 10ஆம் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 28 சதவிகித வரியின் கீழ் இருந்த பெரும் எண்ணிக்கையிலான பொருள்களின் மீதான வரி 18 சதவிகிதமாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க அமைப்புப் பொருளாதாரத்துக்கு வருவோம். அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் இயங்கும் தொழிலாளர்கள் முன்பெல்லாம் அமைப்பு சார்ந்து இருந்தது உண்மையே. அதாவது எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தனரோ அதே நிறுவனம் அவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தி அவர்களுக்குச் சட்டப்படி என்னவெல்லாம் வழங்கப்பட வேண்டுமோ அவையெல்லாம் வழங்கப்படும். ஊதியம், பஞ்சப்படி, போனஸ், விடுமுறை, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ உதவி எனப் பலவும் வழங்கப்பட்டு வந்தது.

புதிய பொருளாதாரக் கொள்கை வந்தபின் இது தலைகீழாக மாறியது. அமைப்புக்கு வெளியே உற்பத்தியின் பல பகுதிகளை வெளியாருக்கு பிரித்தளித்து பெற்றுக்கொள்வது வழக்கமானது. வெளி நிறுவனங்கள் பெரும்பாலும் அமைப்புசாரா நிறுவனங்களாகத் திகழ்ந்தன. ஆட்களும் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை எந்தச் சட்டத்திட்டமும் கிடையாது. அன்றாடக் கூலி மட்டுமே. வேறு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இவர்கள்தான் இன்று இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர்.

இந்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்குப் பதிலாக இதுவரை அமைப்பு சார்ந்து இயங்கிவந்த நிறுவனங்களுக்குள்ளேயே அமைப்புசாரா தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஒரு சிறு துளியாக ஆரம்பித்த இப்போக்கு தற்போது அதுதான் நடைமுறை என்று ஆகிக்கொண்டு வருவது கவலையளிப்பதாகும். இதனை Infomalisation of the formal என்று கூறுவார்.

நம்மிடம் இருக்கும் சமீபத்திய புள்ளிவிவரம் இதைத் தெளிவாகச் சுட்டுகிறது. 2014-15ஆம் ஆண்டில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் 93.9 சதவிகித வேலைவாய்ப்புகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக அளிக்கப்பட்டவையாகும். நிறுவனங்கள் இத்தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தமாட்டா. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது ஒப்பந்ததாரர். ஒப்பந்ததாரரிடம் பணிபுரிபவன் தொழிலாளி. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் எதுவும் செயல்படாமல் இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாம். குறைந்த கூலி. வேறு செலவுகள் எதுவும் கிடையாது. அரசு அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்புக்குள் கொண்டுவந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்வது எதற்காக?

1998-99 ஆண்டில் அமைப்பு சார்ந்த தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் 16 சதவிகிதம் என்ற அளவில் இருந்தனர். 2014-15 ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என்றானது. பணியில் இருக்கும் நிரந்தரத் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று செல்லச் செல்ல இதன் அளவு அதிகரிக்கும் என்பது திண்ணம். ஒருபுறம் வேலைவாய்ப்புகளே பெருகவில்லை. பெருகும் வேலைவாய்ப்பும் இப்படி ஒப்பந்த வேலையாக மாறுவது என்பது இந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வளவு அவலத்துக்கு உள்ளாகப்போகிறது என்பதன் அச்சாரமே!

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon