மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

விரைவில் குளிர்காலக் கூட்டத்தொடர்!

விரைவில் குளிர்காலக் கூட்டத்தொடர்!

‘நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள தைரியமில்லாமல், குளிர்காலக் கூட்டத்தொடர் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போடுகிறது மோடி அரசு’ என்று நேரடியாகக் குற்றம்சாட்டியிருந்தார் சோனியா காந்தி. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அருண் ஜேட்லி, ‘விரைவில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்படும்’ என்றிருக்கிறார்.

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, டிசம்பர் மூன்றாம் வாரத்தில் முடிவடையும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, நாடாளுமன்ற விவகாரக்குழுவில் முடிவு செய்யப்படும். ஆனால், இதுவரை இதுகுறித்து அமைச்சர் அருண் ஜேட்லி வாய் திறக்கவில்லை.

குஜராத் தேர்தல் களத்தில் அமைச்சர்களும் தலைவர்களும் இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தை பத்து நாள்களுக்கும் குறைவாக நடத்த, பாஜக ஏற்பாடு செய்வதாகத் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “குஜராத் தேர்தலைக் காரணம் காட்டி, ஜனநாயகத்தின் கோயிலைப் பூட்டி, அரசியலமைப்புப் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பான எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல், மோடி அரசு குளிர்காலக் கூட்டத்தொடரை முழுவதுமாக நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.

சில மணி நேரங்களிலேயே, இதற்கு மறுப்பு தெரிவித்தார் அருண் ஜேட்லி. “தேர்தல் காரணமாக, காங்கிரஸ் ஆட்சியிலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டும் இதுபோன்று நடந்திருக்கிறது. அதனால், விரைவில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும்” என்றார்.

“கூட்டத்தொடர் நடந்தால் காங்கிரஸின் செயல்பாடுகள் அம்பலமாகும்” என்றவர், “திரும்பத்திரும்பச் சொல்வதால் பொய் உண்மையாகி விடாது” என்று காங்கிரஸைச் சாடியிருக்கிறார்.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon