மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

பத்மாவதி சர்ச்சை: குறுக்கே புகுந்த கமல்!

பத்மாவதி சர்ச்சை: குறுக்கே புகுந்த கமல்!

வழக்கம் போலவே பத்மாவதி திரைப்படத்துக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபிகா படுகோனின் தலைக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி விலை மட்டும் ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து வெளியான மூவரின் கருத்துகள், இந்தப் போராட்டங்களின் போக்கில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் கமல்ஹாசன், உச்ச நீதிமன்றம், ஷாஹித் கபூர்.

கமல் ஏன் உள்ளே வந்தார்?

தீபிகாவின் தலைக்குத் தொகை அறிவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கமல் பதிவு செய்திருக்கும் ட்வீட் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுபோல அமைந்துவிட்டது.

எனக்கு தீபிகாவின் தலை.... காப்பாற்றப்பட வேண்டும். அவரது உடலைவிட தலையை அதிகம் மதிக்க வேண்டும். அவரது சுதந்திரத்தை அதிகம் மதிக்க வேண்டும். அதை நிராகரிக்கக் கூடாது. என் படங்களை பல சமூகங்கள் எதிர்த்திருக்கின்றன. விவாதிக்க வேண்டிய சம்பவத்தில் தீவிரவாதம் காட்டுவது வருந்தத்தக்கது. சிந்திக்கும் இந்தியாவே எழு. இது சிந்திக்க வேண்டிய நேரம். போதுமான அளவுக்கு சொல்லிவிட்டோம். என் பாரதமே கேள்.

கமல்ஹாசன் பதிவு செய்த மேற்கண்ட ட்விட்டர் பதிவுக்குத் தென்னிந்திய ட்விட்டர்வாசிகளில் பலர் ஆதரவும், வடஇந்திய ட்விட்டர்வாசிகளில் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், இத்தனை தைரியமாக மீண்டும் தீவிரவாதம் எனும் வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதைப் பாராட்டியும் வருகின்றனர். தீபிகாவுக்கு தொடர்ந்து விழுந்துகொண்டிருக்கும் வார்த்தைத் தாக்குதல்களை குறுக்கே புகுந்து கமல் பகிர்ந்துகொண்டிருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றம் எப்படி வெளியேறியது?

வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘சென்சார் போர்டு படத்துக்கான சர்டிஃபிகேட்டை ரிலீஸ் செய்வதற்கு முன்பே திரைப்படத்தை தடை செய்ய வைப்பது, சென்சார் போர்டு என்ற அமைப்பின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதற்கான முயற்சியாக அமையும். எனவே, முதலில் சென்சார் போர்டு அதன் நிலைப்பாட்டை சொல்லட்டும். நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமுதாயத்தில் சமநிலையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, பிரச்னைகளை உருவாக்குவதாக இருக்கக் கூடாது’ என்று அம்மனுவை நிராகரித்திருக்கின்றனர்.

இந்தத் தீர்ப்பினால், பத்மாவதி திரைப்படத்தின் மொத்த எதிர்காலமும் சென்சார் போர்டின் கையில் கொடுக்கப்பட்டது. அதனால், ஆங்காங்கே சிதறிக்கிடந்த அத்தனை கேமராக்களும், நேற்று இரவு சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷியின் பக்கம் திரும்பியது. லைட்டைத் திருப்பாதே என்று சொல்லியும் அவர்மீது முழு ஃபோக்கஸும் விழுந்துவிட சில கருத்துகளை முன்வைத்தார் ஜோஷி.

முதலில் சென்சார் போர்டை இயங்கவிடுங்கள். நாங்கள் இயங்கினால்தான் சென்சார் சர்டிஃபிகேட்டுக்கான வேலையை செய்ய முடியும். ஒருபக்கம் போராட்டம் அதிகமாகிறது. இன்னொருபக்கம் யாருக்காவது படம் போட்டுக் காட்டிவிடுகிறார்கள். நாங்கள் இப்படித் தொடர்ந்து உருவாகும் பிரச்னைகளுக்குக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டே இருந்தால் படத்தின் வேலைகளை எப்போது செய்வது என்று சொல்லுங்கள். எங்களுக்குத் தேவை கொஞ்சம் நேரம். அதேசமயம் சுவாசிக்கவும், யோசிக்கவும் இடம். இவை கிடைத்தால்தான் நாங்கள் ஒருமனதாக முடிவெடுக்க முடியும். எங்கள்மீது அழுத்தத்தை திணித்துக்கொண்டே இருந்தால் எப்படி இயங்க முடியும்? என்று ஜோஷி கூறியபிறகு சென்சார் போர்டு கொஞ்சம் இலகுவாக விடப்பட்டிருக்கிறது.

ஷாஹித் கபூர் ஏன் தயங்குகிறார்?

எல்லாவிதமாகவும் பத்மாவதிக்கு எதிராகப் போராடுபவர்களுக்குப் படத்தை விளக்கிவிட்டது படக்குழு. ஆனாலும், அவர்கள் கோபத்தைக் குறைத்துக்கொள்வதாக இல்லை. இதுகுறித்து ஷாஹித் இப்படிப்பட்ட படங்களுக்கு சமயத்தில் சில பிரச்னைகள் வரும். ஆனால், இந்தப் பிரச்னைகள் முடியும் வரை நம்பிக்கையுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். இது கோபப்படவோ, அமைதியை கைவிடுவதற்கான நேரமோ இல்லை. ஏற்கெனவே சிலர் அதை செய்துகொண்டிருக்கின்றனர். படத்தைப் பார்க்கும்போது எல்லாம் தெரியும் என்று IFFI ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.

படத்தைப் பாருங்கள் என படத்தைப் பார்த்த அனைவரும் இத்தனை நம்பிக்கையாகச் சொல்வதற்குக் காரணமும், இத்தனைப் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டதற்கும் ஒரே காரணம் படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த ஒரு நடனம்.

அலாவுதீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீர் சிங்குடன், பத்மாவதியாக நடிக்கும் தீபிகா நடனமாடுவது போன்று காட்சிப்படுத்தியிருப்பதாகச் சாலையில் இறங்கி போராடுபவர்கள் சொல்கிறார்கள். படக்குழு அப்படியெல்லாம் இல்லை என்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்கிறார்கள். இதற்குக் காரணம், அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதம். பத்மாவதி மீது ஆசைகொள்ளும் அலாவுதீன் கில்ஜி நினைத்துப்பார்ப்பது போல அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருப்பதாகப் படத்துக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியிருந்தாலும் ஒரு நடிகையின் தலையை வெட்டவும், உயிரோடு எரிக்கவும் வெளிப்படையான அறிவிப்புகளைக் கொடுத்தவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வருத்தத்துக்குரிய உண்மை.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon